Monday, February 11, 2013
இலங்கை::இரண்டு நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் ஜனாதிபதி அவர்கள் யாழ். மாவட்டத்தில் மக்களின் நலன் கருதி முன்னெடுக்கப்பட்ட பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்து பொது மக்களின் பாவனைக்கு கையளிக்கவுள்ளார்.
நாளை செவ்வாய்க்கிழமை காலை சுன்னாகத்திற்கு செல்லும் ஜனாதிபதி அவர்கள் சுன்னாகத்தில் புதிதாக நிர்மாணிக் கப்பட்டுள்ள மின்சார உற்பத்தி நிலையத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.
இதன் மூலம் 204 மெகா வோட் மின்சாரம் புதிதாக உற்பத்தி செய்யப்பட்டு நாளை முதல் யாழ். குடா நாட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
இதற்கமைய யாழ். குடா நாடு முழுவதும் தங்குதடையின்றி மின்சாரம் விநியோகிக்கப் படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் யாழ். மாவட்ட விசேட அபிவிருத்திக் குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. யாழ்.
ரில்கோ ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் கொழும்பிலிருந்து செல்லும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படைகள் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் பாரிய நிதி ஒதுக்கீட்டில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி அவர்களின் தலைமையில் விரிவாக ஆராயப்படும்.
அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்த உட்பட யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொள்ள வுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நயினை நாகபூசணி அம்பாள் கோயிலுக்கும் நாகவிகாரைக்கும் சென்று சமய வழிபாடுகளில் ஈடுப்படவுள்ளதுடன், நாக விகாரை பிரதேசத்தில் சுமார் 30 மில்லியன் ரூபா செலவில் கடற்படையினரால் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இறங்கு துறையையும் ஜனாதிபதி அவர்கள் திறந்து வைக்கவுள்ளார்.
இதன் மூலம் அங்கு வருகைத்தரும் பக்தர்கள் பெரிதும் நன்மையடையவுள்ளனர்.
இதேவேளை நாளை மறுதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி அவர்கள் சுமார் 3000 மில்லியன் ரூபா செலவில் யாழ்.
போதனா வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நான்கு மாடிகளைக் கொண்ட புதிய கட்டடத் தொகுதியையும் திறந்து வைத்து மக்களின் பாவனைக்கு கையளிக்கவுள்ளார்.
ஜெய்கா நிறுவனத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நான்கு மாடிக் கட்டடத்தில் அதிநவீன வசதிகளைக் கொண்ட சத்திரசிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, நவீன மருத்துவ இயந்திர பிரிவு, ஆய்வு கூடங்கள் போன்றன அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் யாழ். மாவட்ட மக்களுக்கு நாளை மறுதினம் முதல் முழுமையான சுகாதார வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.

No comments:
Post a Comment