Monday, February 11, 2013
நியூயார்க்::விண்வெளியில், முதன் முதலாக ஒரு பாடல் எழுதி, பதிவு செய்யப்பட்டு உள்ளது. கனடாவை சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவரும், அமெரிக்காவின் இசைக்குழுவை சேர்ந்த பாடகர் ஒருவரும் இணைந்து, இந்த சாதனையை செய்துள்ளனர்.
பூமிக்கு மேலே, 402 கி.மீ.,க்கு அப்பால் உள்ள, சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி பணிபுரியும், கனடாவை சேர்ந்த கிறிஸ் ஹேட்பீல்டு, நல்ல பாடகரும் கூட. அவரும், "பேர்நேக்டு லேடீஸ்' இசைக்குழுவின் முக்கிய பாடகர் எட் ராபர்ட்சனும் நல்ல நண்பர்கள். இருவரும் சேர்ந்து விண்வெளியில் இருந்து ஒரு பாடலை பாடி, பதிவு செய்ய திட்டமிட்டனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள, கப்போலா எனும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கிறிஸ் ஹேட்பீல்டும், கனடாவில் உள்ள ஒலிப்பதிவுக் கூடம் ஒன்றில் இருந்த, எட் ராபர்ட்சனும், இணைந்து இந்த பாடலை எழுதினர்.
பிறகு, செயற்கைக்கோள் ஒளிபரப்பு மூலம், கிறிஸ் ஹேட்பீல்ட் பாடிய பாடல், பூமியில் உள்ள ஒலிப்பதிவு கூடத்தில் பதிவு செய்யப்பட்டது. அவருடன், எட் ராபர்ட்சனும் இணைந்து பாடினார்.விண்வெளி வீரர் ஒருவர், பூமியில் உள்ள தன் அன்புக் குரியவர்களை நினைத்து பாடுவதாக, பாடல் வரிகள் அமைந்துள்ளன. பாடல் ஒலிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளதாக, எட் ராபர்ட்சன் தெரிவித்துள்ளார்.
தன் விண்வெளி பணிகளுக்கு இடையில், இன்னும் சில பாடல்களை உருவாக்கி, ஒரு இசை ஆல்பம் தயாரிக்க, கிறிஸ் ஹேட்பீல்டு திட்டமிட்டு உள்ளார்.

No comments:
Post a Comment