Tuesday, February 05, 2013
இலங்கை:::வந்தாறமுலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞானபீடத்தின் விலங்கியல்துறை கட்டிடத்தொகுதியையும் நல்லையா மண்டபத்தையும் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை வைபவ ரீதியாக திறந்துவைத்தார்.
ஹெலிகொப்டரில் வந்தாறமுலை கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில் வந்திறங்கிய ஜனாதிபதியை உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, அமைச்சர் பஷீர் சேகுதாவூத், பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்னன் கோவிந்தராஜா உள்ளிட்ட அதிதிகள் வரவேற்றனர்.
இதன்போது குறித்த பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடியதுடன், அவர்களுடைய குறைநிறைகளையும் கேட்டறிந்தததுடன் விலங்கியல் ஆய்வுகூடத்தையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் உயர் கல்வியமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், பசீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்னன் கோவிந்தராஜா உட்பட அதிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார்.
ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்தை ஆரம்பித்து வைத்தல், 600 மில்லியன் ரூபா செலவில் குவைத் அரசினால் நிர்மாணிக்கப்பட்டடுள்ள 700 மாணவர்கள் தங்கக் கூடிய விடுதிக் கட்டிடம் அடங்கலாக நிர்வாக மற்றும் விரிவுரை மண்டபக் கட்டிடத்தினையும், குவைத் இலங்கை நாடுகளுக்கிடையிலான நட்புறவை வலியுறுத்தும் நினைவுத்தூபி என்பனவற்றையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






No comments:
Post a Comment