Tuesday, February 26, 2013

மதுரையில் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா பார்க் கட்டிட சுவர் இடிப்பு: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!

Tuesday, February 26, 2013
மதுரை::மதுரை மாட்டுத்தாவணியில் மத்திய மந்திரி மு.க.அழகிரி குடும்பத்துக்கு சொந்தமான 2 லட்சம் சதுர அடியில் மிக பிரமாண்டமான தயா சைபர் பார்க் தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டது. அதன்பின்பு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அங்கு கட்டிட பணிகள் நிறுத்தப்பட்டது.

பார்க்கின் முன்பகுதி மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக புகார் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நில அளவை துறை மற்றும் என்ஜினீயர்கள் ஆய்வு செய்தனர்.

பார்க்கின் முன் பகுதியில் 8 செண்ட் நிலம் ஆக்கிரமித்து இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக மத்திய மந்திரி மு.க.அழகிரி மற்றும் காந்தி அழகிரி ஆகியோருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது. அங்கு மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

தயா பார்க் அருகே கம்ப்யூட்டர் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனமும் மாநகராட்சிக்கு சொந்தமான 11 செண்ட் நிலம் ஆக்கிரமித்து கட்டப்பட்டது தெரியவந்தது. அதன் உரிமையாளருக்கும் முறைப்படி நோட்டீசு அனுப்பப்பட்டது. அந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இன்று மாநகராட்சி கமிஷனர் நந்தகோபால் மேற்பார்வையில் தயா பார்க்கின் முன்பகுதியில் கட்டப்பட்டுள்ள சுவர்கள் இடிக்கப்பட்டன.

2 புல்டோசர்கள் மூலம் நகரமைப்பு அதிகாரி ராக்கப்பன், உதவி பொறியாளர்கள் ரங்கநாதன், முத்துக்குமார், பழனிச்சாமி, என்ஜினீயர்கள் ஆறுமுகம், முருகேச பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் இடிக்கப்பட்டது. அதுபோல கம்ப்யூட்டர் நிறுவனம் சார்பில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிட சுவரும் இடிக்கப்பட்டது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

No comments:

Post a Comment