Sunday, February 10, 2013
சென்னை::கடும் மின் தட்டுப்பாடு, தொழில்துறை பாதிப்பு, வறட்சியால், விவசாயிகள் தற்கொலை, காவிரி பிரச்னை, அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றம் போன்ற பல பிரச்னைகள் தலைதூக்கியுள்ள நிலையில், தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், கவர்னர் உரையுடன் துவங்கியது.
இந்த பிரச்னைகளை முன் வைத்து, எதிர்க்கட்சிகள், கடும் தாக்குதல்களை தரக்கூடும் என, அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், நிலைமையை, ஆளும் அ.தி.மு.க., அப்படியே தலை கீழாக மாற்றி, எதிர்க்கட்சிகளை, எடுபடாத கட்சிகளாக மாற்றியது.கவர்னர் உரையில், எதுவுமே இல்லை, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நிவாரணம் அறிவிக்கப்படவில்லை; மின்வெட்டு பிரச்னையை தீர்க்க, எதுவும் சொல்லவில்லை என, எதிர்க்கட்சிகள் அறிக்கைகள் மூலம் வாதத்தை துவக்கின.
கவர்னர் உரை மீதான விவாதம், 5ம் தேதி துவங்கி, 8ம் @ததி முதல்வர் ஜெயலலிதா பதில் உரையுடன், இந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. நான்கு நாள் விவாதத்திலும், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், "ஆப்சென்ட்.'தி.மு.க.,வில், ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கலந்துகொண்ட போதும், அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம். எல்.ஏ.,க்களின், கேள்விக் கணைகளுக்கு, பதில் சொல்ல முடியாமல், அடிக்கடி வெளிநடப்பு செய்தது தான் மிச்சம்.
மத்தியிலும், மாநிலத்திலும், நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, இலங்கைத் தமிழர்கள், கொத்து, கொத்தாக படுகொலை செய்யப்பட்டனர். அவர்களை காப்பாற்ற, நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? காவிரி பிரச்னையில், சிறு துரும்பையாவது கிள்ளிப்போட்டது உண்டா, காவிரி தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிட, நீங்கள் அழுத்தம் தராதது ஏன்? என, சீனியர் அமைச்சர்கள், அடுக்கடுக்காக எழுப்பிய கேள்விகளுக்கு, பதில் அளிக்க முடியாமல், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் திணறிப் போயினர். காவிரி பிரச்னை குறித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ., செழியன் பேசியபோது,
""அந்தப் பிரச்னையைப் பற்றி பேச, உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?'' என, அமைச்சர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ""உங்களை விட, எங்களுக்கு தகுதி அதிகம் உள்ளது,'' என, ஸ்டாலின் தெரிவித்தார்.
""அந்த தகுதியை, விரிவாக கூறுங்களேன்,'' என, அமைச்சர்கள் விடாப்பிடியாக கேட்டதும், ""அதை, அவர் பேசுவார்,'' என, செழியனை கை காட்டி, ஸ்டாலின் ஜகா வாங்கியதைக் கண்டு, ஆளுங்கட்சியினர், வயிறு, குலுங்க குலுங்க சிரித்தனர்.தி.மு.க.,வின் முன்னணி தலைவர்களில் ஒருவராகவும், பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்து, காவிரி விஷயத்தை முழுவதுமாக அறிந்த துரைமுருகன், இந்த கூட்டத்தொடர் முழுவதும் முழுக்கு போட்டதும், தி.மு.க.,விற்கு, ஒரு பின்னடைவு.
நையாண்டிக்கும், கேலிக்கும் பயந்தே:-
மேலும், காவிரி விஷயத்தில், கர்நாடகாவை குட்டி, தொடர்ந்து தமிழக அரசுக்கு ஆதரவாக, சுப்ரீம் கோர்ட் உத்தரவுகள் வந்துகொண்டே இருந்தது, ஆளுங்கட்சியினருக்கு, குஷியை ஏற்படுத்தி விட்டது. இ
தனால், இந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு, ஜெயலலிதாவே காரணம் என, அமைச்சர்கள், மேற்கோள்களுடன் சுட்டிக்காட்டினர். சட்டம்-ஒழுங்கு பிரச்னையை கிளப்பியபோதும், "தி.மு.க., ஆட்சியில், 5.5 சதவீதமாக இருந்த குற்றங்கள் அளவு, அ.தி.மு.க., ஆட்சியில், 3.3 சதவீதமாக குறைந்துள்ளது' என, புள்ளி விவரத்டன், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.
தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., க்கள் நிலை, பரிதாபமாக இருந்தது. விஜயகாந்தை, நையாண்டி செய்து, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., கள் பேசியபோதும், அனைத்தையும், அமைதியாக, அவர்களால் கேட்க மட்டுமே முடிந்தது. நையாண்டிக்கும், கேலிக்கும் பயந்தே, விஜயகாந்த் கடைசி நாள் வரை சபைக்கு வரவில்லை எனக் கூறப்படு கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட, குறைகளையும், கோரிக்கைகளாகவே சுட்டிக் காட்டினர்.
எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், விவசாயிகள் பாதிப்பிற்கு நிவாரணம் இல்லை என்ற குற்றச்சாட்டை, நான்கு நாட்களும் பிரதானமாக கூறிவந்த நிலையில், இறுதி நாளான நேற்று முன்தினம், தனது பதில் உரையில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர். மொத்தத்தில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், எதிர்க்கட்சிகளை எடுபடாத கட்சிகளாக மாற்றி, ஆளுங்கட்சி, தனது சாமர்த்தியத்தை வெளிப்படுத்தி விட்டது.


No comments:
Post a Comment