Sunday, February 10, 2013
இலங்கை::மதங்களுக்கு எதிராக ஏதேனும் சம்பவங்கள் நடைபெறும் பட்சத்தில் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கவென பொலிஸ் தலைமையகத்தில் விசேட நடவடிக்கை பிரிவொன்று இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.
பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோனின் ஆலோசனைக்கமைய இன்று 10 ஆம் திகதி முதல் 24 மணி நேரமும் இவ்விசேட நடவடிக்கைப் பிரிவு இயங்கவுள்ளது.
இலங்கையில் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் மத சுதந்திரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். எனினும் ஆங்காங்கே மதங்களுக்கு எதிராக சில எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். சில மத குருமார் தாக்கப்படுகின்றனர். இவை தொடர்பாக பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் செய்வதிலும் பல அசெளகரியங்களை எதிர்நோக்குவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே இவற்றைக் களையும் நோக்குடன் எவருடைய மதத்துக்கும் எதிரான முன்னெடுப்புகள் மேற்கொள் ளப்பட்டாலும் இவ்விசேட நடவடிக்கை பிரிவுக்கு உடனடியாக முறைப்பாடு செய்ய முடியும்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று 10 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகும் இவ்விசேட நடவடிக்கை பிரிவு 24 மணி நேரமும் இயங்கும்.
எந்தவொரு மதத்துக்கு எதிராக நடைபெறும் தொல்லைகள், தொந்தரவுகள் தொடர்பாக எவர் வேண்டுமானாலும் உடனடியாக தொலைபேசி மூலமோ அல்லது தொலைநகல் மூலமோ தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும். முறைப்பாடு கிடைத்த அடுத்த விநாடியே பொலிஸ் தலைமையகத்தின் விசேட நடவடிக்கை பிரிவு சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அண்மித்த பொலிஸாருக்கு தகவல் வழங்குவதுடன் உடனடியாக ஸ்தலத்துக்கு விரைவதற்கான பணிப்புரைகளையும் வழங்குவார்கள் தொலைநகல் மூலம் (பிax) அறிவிக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் 011-2423944 ஆகும்.
விசேட நடவடிக்கை பிரிவின் தொலைபேசி இலக்கங்கள் 011-3182904 அல்லது 011-3188753 என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment