Wednesday, February 06, 2013
இலங்கை::இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு பரிந்துரைகளை மேற்கொள்வதற்கான தீர்மானங்கள் எதுவும் ஜெனீவாவில் எடுக்கப்படுவதற்கான எந்தக்காரணங்களுமில்லை. யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையில் அரசியல், பொருளாதார, சமூகரீதியில் நாங்கள் பாரிய முன்னேற்றங்களை வெளிப்படுத்தியுள்ளோம் என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப்பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை குறித்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:-
அமெரிக்க உலக வர்த்தகக் கோபுரங்கள் மீதான தாக்குதலின் பின்னர் உலகில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் அழைப்பு விடுத்தது. அந்த அழைப்பின் பேரிலேயே பயங்கரவாதத்தை வெற்றிகரமாக தோற்கடித்த நாடு இலங்கையாகும் என்பதனை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
இலங்கை மீது சர்வதேச மட்டத்தில் இருந்து பொருளாதாரத்தடைகளை விதிப்பதற்கான எந்தக் காரணியும் இல்லை. யுத்தத்தின் பின்னரான நாட்டின் முன்னேற்ற நிலைமைகள் குறித்து நாங்கள் சர்வதேச சமூகத்துக்கு தொடர்ந்தும் விளக்கமளிப்போம்.
இதேவேளை, தனிப்பட்ட நாடுகள் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் பல நிகழ்ச்சிகள் இருக்கலாம் இது உலக இயல்பாகும்.
குறிப்பாக தமக்குத் தேவையான ஆட்சியை நிறுவுவதற்கான நிகழ்ச்சி நிரல்கள் சர்வதேச மட்டத்தில் காணப்படும். அவற்றை புரிந்துகொண்டு நாம் செயற்பட வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment