Wednesday, February 06, 2013
சென்னை::பொது மக்கள் கூடும் இடங்கள், ஆடிட்டோரியம், ஆஸ்பத்திரி வளாகம், ரெயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், கோர்ட்டு வளாகங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் உள்ளிட்ட பகுதிகள் பொது இடங்களாக அறிவிக்கப்பட்டன. இந்த சட்டம் அமுலுக்கு வந்து 4 ஆண்டுகள் முடிந்து விட்டன.
ஆனால் அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதால் பொது இடங்களில் புகை பிரியர்கள் தாராளமாக ஊதி தள்ளுகிறார்கள். இதனால் பொது மக்கள் சிரமப்படுகிறார்கள். புகையிலை கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுகாதார ஆய்வாளர்கள் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.
அப்போது பொது இடத்தில் புகை பிடித்தால் அபராதம் விதிக்கும் சட்டம் அமுலில் இருந்தும் தீவிரப்படுத்தவில்லை என்று கூறப்பட்டது. எனவே பொது இடங்களில் புகை பிடித்தால் அபராதம் விதிப்பது, புகையிலை தடை சட்டங்கள் ஆகியவற்றை தீவிரமாக நடைமுறைப்படுத்தும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து சென்னையில் பொது இடங்களில் சிகரெட் பிடிப்பவர்களிடம் ரூ. 200 அபராதம் வசூலிப்பது தீவிரமாக உள்ளது. அபராதம் கட்ட முடியாதவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
புகையிலை பொருட்கள் தொடர்பான விளம்பர பலகைகளையும் வருகிற 25-ந் தேதிக்கு மேல் அப்புறப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி உள்ளன. வியாபார நிறுவனங்கள் 25-ந் தேதிக்கு முன்பு இந்த மாதிரியான விளம்பர பலகைகளை அகற்றி விட வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment