Sunday, February 3, 2013

பொட்டு சுரேஷ் படுகொலைஅட்டாக் பாண்டியை பிடிக்க தனிப்படை போலீஸ் தீவிரம்!

Sunday, February 03, 2013
மதுரை::திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் கொலை தொடர்பாக அட்டாக் பாண்டியை பிடிக்க, தமிழகம் முழுவதும் பத்து தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். கூலிப்படையை சேர்ந்த நான்கு பேர் போலீசார் பிடியில் சிக்கியுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கண்டுபிடிக்க துணை கமிஷனர் திருநாவுக்கரசு தலைமையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கூலிப்படையை சேர்ந்த நான்கு பேர் போலீசில் சிக்கியுள்ளனர். அட்டாக்பாண்டியை கைது செய்தால்தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்பதால், அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

அட்டாக் பாண்டியின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க அவரது உறவினர்கள், நண்பர்கள் என 20க்கும் அதிகமானோரை பிடித்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல் கட்ட விசாரணையில் பொட்டு சுரேஷை, அட்டாக் பாண்டி கூலிப்படையை வைத்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்தில் கிடைத்த தகவல்கள், ஆதாரங்கள், டிரைவர் தெரிவித்த தகவல்கள், கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அட்டாக் பாண்டிக்கும் கொலைக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொலை சம்பவம் நடந்த போது கீரைத்துறையை சேர்ந்த கருப்பு என்பவர் அந்த பகுதியில் சுற்றி வந்துள்ளார். அவரிடம் 2 நாளாக விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டதில் முக்கிய துப்பு கிடைத்தது. கொலையில் தொடர்புடைய 8 பேரில் நான்கு பேர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அட்டாக் பாண்டி நேற்று மேலூர் கோர்ட்டில் சரண் அடைவதாக தகவல் கிடைத்தது. ஆனால், அவர் சரண் அடையவில்லை. இன்றும், நாளையும் கோர்ட் விடுமுறை. இதனால், நாளை சரண் அடையலாம். இருப்பினும், கோர்ட்டில் சரண் அடைவதற்குள் அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக உள்ளனர். அட்டாக் பாண்டியை கைது செய்ய திருவில்லிபுத்தூர், சென்னை உள்பட பல இடங்களுக்கு தனிப்படை போலீசார் சென்றுள்ளனர்.

நத்தம் கோர்ட்டில் 7 பேர் சரண்

மதுரை பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் இன்று காலை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கூலிப்படையைச் சேர்ந்த 7 பேர் மாஜிஸ்திரேட் ஆனந்தன் முன்னிலையில் சரணடைந்தனர். மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்த சபாரத்தினம் (25), சந்தானம் (24), ராஜா(25), லிங்கம் (24), செந்தில்(25), சேகர் (24), கார்த்தி (24) ஆகியோர் இன்று காலை 11 மணியளவில் கோர்ட்டுக்கு வந்தனர். மதுரையைச் சேர்ந்த வக்கீல் கண்ணன் இவர்களை சரணடைய அழைத்து வந்தார்.

No comments:

Post a Comment