Friday, February 08, 2013
புதுடெல்லி::ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் வீட்டினை முற்றுகையிட முயன்ற வைகோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மதிமுக வினரை போலீசார் கைது செய்தனர்..
இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று இந்தியா வருகிறார். ஒடிசா மாநிலம் கயா மற்றும் திருப்பதி எழுமலையான் கோவிலுக்கு செல்லும் அவருக்கு மத்திய அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. ராஜபக்சே இந்தியா வருவதற்கு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ம.தி.மு.க. சார்பில் டெல்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக வைகோ அறிவித்தார். இதற்காக ம.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ரெயில் மற்றும் விமானம் மூலம் டெல்லி சென்றனர். சுமார் 1000 தொண்டர்கள் டெல்லியில் குவிந்தனர். அவர்கள் அனைவரும் இன்று காலையில் ஜந்தர்மந்தரில் திரண்டனர். பிரதமர் இல்லம் இருக்கும் ரேஸ்கோர்ஸ் சாலையில் 144 தடை உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது. அங்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் போலீஸ் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்தார். அதன்படி அனைவரும் பிரதமர் இல்லம் நோக்கி புறப்பட்டனர். அப்போது வைகோ உள்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
இலங்கை அதிபர் ராஜபச்சே வருகைக்கு எதிர்ப்பு: ஆந்திர எல்லையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 30 பேர் கைது!
இலங்கை அதிபர் ராஜபச்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர எல்லை புத்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு தலைமையில் 30 பேர் மறியல் செய்தனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 30 பேரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய இந்த திடீர் போராட்டத்தால் பரபரப்பு நிலவியது...
சென்னையில் இலங்கை அதிபர் ராஜபச்சே உருவபொம்மை எரிப்பு:இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது!
இலங்கை அதிபர் ராஜபச்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணாசாலையில் இலங்கை கொடி, ராஜபச்சே உருவபொம்மையை தமிழக எழுச்சி இயக்கத்தினர் வேலுமணி தலைமையில் எரித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர்...
பொள்ளாச்சி காந்தி சிலை அருகே இலங்கை அதிபர் உருவபொம்மை எரிப்பு: 18 பேர் கைது!
இலங்கை அதிபர் ராஜபட்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து, பொள்ளாச்சி காந்தி சிலை அருகே ரஜபட்சே உருவபொம்மையை எரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அதுபோல், ஆனமலை பகுதியில் ராஜபட்சே உருவபொம்மையை எரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்....
இலங்கை அதிபர் ராஜபச்சே வருகையை கண்டித்து புதுச்சேரியில் போராட்டம்: 50 பேர் கைது!
இலங்கை அதிபர் ராஜபச்சே வருகையை கண்டித்து புதுச்சேரி நேரு வீதியில் உள்ள திருப்பதி தேவஸ்தான கிளை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற சட்டக் கல்லூரி மாணவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதே போல ராஜிவ் காந்தி சதுக்கத்தில் ராஜபட்சே உருவ பொம்மையை எரித்த இந்திய பூரான்கள் இயக்கம், தமிழக வாழ்வுரிமை கட்சி, திராவிடர் விடுதலை இயக்கம் ஆகியவற்றை சேர்ந்த 25 பேர் கைது செய்யபட்டுள்ளனர்......
ஓசூரில் இலங்கை அதிபர் ராஜபச்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியல்: 100 பேர் கைது!
ஓசூரில் இலங்கை அதிபர் ராஜபச்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினர் மறியல் செய்தனர். பெங்களூர் நாகூர் பயணிகள் ரயிலை மறித்து போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், பெரியார் திராவிடர் கழகத்தினர், தமிழ்தேச பொதுவுடைமை கட்சியினர் உள்ளிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.....
இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து சட்டசபைக்கு வெளியே எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து இன்று சட்டசபைக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.க்களும், புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ.க்களும் கண்டன வாசகங்கள் அடங்கிய கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்தனர். முன்னதாக சட்டசபைக்கு வெளியே அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன் தலைமையிலும், புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் கிருஷ்ணசாமி, ராமசாமி ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கையில் இனப்படுகொலை செய்த அதிபர் ராஜபக்சே இந்தியாவில் நுழைய அனுமதிக்கக் கூடாது. அவரை உடனடியாக வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை அமுல்படுத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

No comments:
Post a Comment