Friday, February 08, 2013
திருமலை::இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று மாலை தனி விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் திருப்பதி திருமலைக்கு வருகிறார். இரவு பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை அதிகாலை ஏழுமலையான் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சுப்ரபாத சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்கிறார். அவரை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பாபிராஜு, செயல் அலுவலர் சுப்பிரமணியம் ஆகியோர் வரவேற்று பிரசாதம் வழங்குகின்றனர்.
சாமி தரிசனம் முடிந்ததும் பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். காலை 9.30 மணிக்கு கார் மூலம் ரேணிகுண்டா செல்கிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் இலங்கை புறப்பட்டு செல்கிறார்.
ராஜபக்சே 60 பேருடன் இந்தியா வருகிறார். திருப்பதியில் ராஜபக்சேவுக்கு ம.தி.மு.க.வினர் கறுப்பு கொடி காட்ட போவதாக அறிவித்துள்ளதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் 2 போலீஸ் சூப்பிரண்டு, டி.எஸ்.பி.க்கள் உள்பட 300 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருப்பதி திருமலை வரை வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராஜபக்சே வருகையையொட்டி ரேணிகுண்டா, திருப்பதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்சே திருப்பதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சித்தூர் மாவட்டம் சித்தூர், நகரி, காளஹஸ்தி உள்பட பல்வேறு நகரங்களில் ம.தி.மு.க. சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை போலீசார் கிழித்து அப்புறப்படுத்தினர்.....
இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று மாலை திருப்பதி வருகை: பலத்த பாதுகாப்பு!
தமிழக அனைத்துக் கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று மாலை திருப்பதிக்கு வருகிறார். அவருடைய பாதுகாப்பு கருதி ரேணிகுண்டா விமான நிலையம், திருப்பதி, திருமலைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாலை 4.30 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்தை அடையும் ராஜபக்சே, 5.25 மணிக்கு திருமலையை அடைந்து அங்கே பத்மாவதி நகரில் உள்ள கிருஷ்ணா விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார். நாளை அதிகாலை 2.30 மணிக்கு சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை தரிசிக்கிறார்.
பின்னர் காலை 8.35 மணிக்கு திருமலையிலிருந்து புறப்பட்டு 9.20 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து கொழும்பு புறப்பட்டுச் செல்கிறார். ம.தி.மு.க. தொண்டர்கள் திருப்பதியில் ராஜபட்சவுக்கு கருப்புக் கொடி காட்ட உள்ளதாகவும் தர்ணா செய்யவுள்ளதாகவும் அறிவித்ததால் பாதுகாப்பை காவல் துறை மேலும் பலப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்திய உளவுத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து ராஜபக்சேவின் இந்தியப் பயணத்தில் நேற்று மாலை கடைசி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி டெல்லி வருவதாக இருந்த அவரது பயணம் தவிர்க்கப்பட்டு, அவர் நேரடியாக ஒடிசா செல்லவுள்ளார்.

No comments:
Post a Comment