Monday, February 04, 2013
பந்தலூர்::நீலகிரியில் 83 போலி பாஸ்போர்ட்களுடன் இலங்கை வாலிபர் பிடிபட்டார். சென்னை ஏஜென்ட் உதவியுடன் பலரை போலி பாஸ்போர்ட் மூலம் வேலைக்காக ஈராக் அனுப்பியது தெரியவந்துள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த கீழ்நாடுகாணி பகுதியில் தேவாலா எஸ்ஐ சத்தியசீலன் மற்றும் போலீசார் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். நடந்து சென்ற ஒரு வாலிபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் தேவாலா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்தனர். பிடிபட்டவர், இலங்கையை சேர்ந்த தியாகராமன் (32) என்று தெரிந்தது.
இவர், கடந்த மாதம் 14-ம் தேதி இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்துள்ளார். அங்குள்ள ஏஜென்ட் தேவா என்பவரை பார்க்கச் சென்றார். அவர் இல்லாததால் பந்தலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தது தெரியவந்தது. ஏஜென்ட் மூலம் போலி பாஸ்போர்ட்களை வைத்து பலரை ஈராக்குக்கு வேலைக்கு அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தியாகராமனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 83 போலி பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த சென்னை ஏஜென்ட் தேவாவை தேடி வருகின்றனர். தியாகராமன் வேறு வழக்குகளில் தொடர்புடையவரா, சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடக்கிறது.

No comments:
Post a Comment