Wednesday, February 13, 2013
coming soon images புதுடெல்லி::இந்திய ராணுவத்துக்கு இத்தாலி நிறுவனத்தின் ஹெலிகாப்டர்களை வாங்கியதில் ரூ.400 கோடி அளவுக்கு லஞ்சம் கைமாறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் விமானப்படை முன்னாள் தளபதி தியாகியின் உறவினர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இத்தாலியை சேர்ந்த ‘அகஸ்டா வெஸ்ட்லேண்ட்’ என்ற ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு 12 ஹெலிகாப்டர்கள் (ஏடபிள்யூ 101 ரகம்) வாங்க இந்திய அரசு கடந்த 2010ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டது. இதுவரை 3 ஹெலிகாப்டர்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளன. எஞ்சியவை அடுத்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த ஒப்பந்தம் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு இத்தாலி நிறுவனம் ரூ.400 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய இத்தாலிய அதிகாரிகள், ஹெலிகாப்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜியூசெப்பே ஆர்சியை கைது செய்துள்ளனர். இதை தொடர்ந்து இந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்துமாறு சிபிஐ அதிகாரிகளுக்கு ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி உத்தரவிட்டுள்ளார்.
ஹெலிகாப்டர் டெண்டர் விடப்பட்ட போது விமானப்படை தளபதியாக இருந்தவர் தியாகி. டெண்டரில் கொடுக்கப்பட்ட நிபந்தனைகளின்படி அமெரிக்காவை சேர்ந்த ஹெலிகாப்டர் நிறுவனம் மட்டுமே தகுதி பெற்றிருந்தது. இத்தாலி நிறுவனத்துக்காக டெண்டர் நிபந்தனைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக தியாகியின் உறவினர்கள் ஜுலி, டாக்சா மற்றும் சந்தீப் தியாகி ஆகிய 3 பேருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிர்வாகிகள் இரண்டுபேரை இத்தாலி போலீஸ் கைது செய்துள்ளது. அவர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட கைது வாரன்ட்டில் இந்த தகவல் இடம்பெற்றிருப்பதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால், லஞ்சம் பெற்றதாக வெளியாகியிருக்கும் தகவலை விமானப்படை முன்னாள் தளபதி தியாகி மறுத்துள்ளார். ‘நான் பதவியில் இருந்தவரை டெண்டரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை’ என்று கூறியுள்ளார். இதற்கிடையே இத்தா லியில் இருந்து கசியவிடப் படும் தகவல்களால் டெல்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லஞ்சம் பெற்றதாக சொல்லி சிலரின் பெயர்கள் முணுமுணுக் கப்படுவதால் டெல்லியில் அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் வட்டாரத்தில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment