Wednesday, February 06, 2013
புதுச்சேரி::போலி பாஸ்போர்ட் கொடுத்து, பிரான்ஸ் நாட்டிற்குச் செல்ல, விசா கேட்ட இலங்கை அகதிகள், 2 @பரை போலீசார் கைது செய்தனர். சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த, இலங்கை அகதி ரவீந்திர ராசு, 37. இவரும், புதுச்சேரி முதலியார்பேட்டை அய்யப்பசுவாமி நகரை சேர்ந்த, புஷ்பலதா, 34 என்பவரும் கணவன், மனைவி என கூறி, புதுச்சேரியிலுள்ள பிரெஞ்சு தூதரகத்தில், பிரான்ஸ் செல்ல, விசா கேட்டு, விண்ணப்பித்துள்ளனர். இருவரும் விசா வழங்க, ஆவணமாக பாஸ்போர்ட் கொடுத்துள்ளனர். பிரெஞ்சு தூதரக அதிகாரிகள், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை, சென்னையிலுள்ள, மத்திய பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதிகாரிகள் நடத்திய ஆய்வின் போது, ரவீந்திர ராசு கொடுத்த, பாஸ்போர்ட் போலியானது என, தெரியவந்தது.
பாஸ்போர்ட்டில் தங்கவேல் சேகரன், சங்கரலட்சுமி சேகரன் என்று போலியான பெயரை கொடுத்துள்ளனர். இதை தொடர்ந்து, சென்னையிலுள்ள, பாஸ்போர்ட் அதிகாரிகள், புதுச்சேரியிலுள்ள, பிரெஞ்சு தூதரக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர். இதன் பேரில், பெரியகடை போலீசாருக்கு, முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு, விசா கேட்டு விண்ணப்பித்த இருவரையும், 4ம் தேதி நேரில் வருமாறு பிரெஞ்சு தூதரகம் சார்பில் அழைப்பு விடுவித்திருந்தனர். நேற்று முன்தினம் மாலை ரவீந்திர ராசு, புஷ்பலதா ஆகிய இருவரும் பிரெஞ்சு தூதரக அலுவலகத்திற்கு வந்தபோது, பெரியகடை போலீசார் இருவரையும் கைது செய்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
போலி பாஸ்போர்ட் குறித்து, புதுச்சேரியிலுள்ள இமிகிரேஷன் அதிகாரி பாலின், பெரியகடை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வடக்கு எஸ்.பி., ராமராஜீ, சப்-இன்ஸ்பெக்டர் சஜித் ஆகியோர், பிடிபட்ட இலங்கை அகதிகள் இருவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், புஷ்பலதா திருச்சியைச் சேர்ந்தவர் என்றும், முதலியார்பேட்டையிலுள்ள உறவினர் வீட்டில் வசித்தது போல் முகவரி கொடுத்துள்ளார். சென்னையைச் சேர்ந்த புரோக்கர் குமரன் என்பவர், இருவரையும் கணவன், மனைவியாக காண்பித்து போலியாக பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்துள்ளார். பெரியக்கடை போலீசார் குமரனை பிடிக்க சென்னைக்கு விரைந்துள்ளனர். பெரியக்கடை போலீசாரால், கைது செய்யப்பட்டுள்ள, இலங்கை அகதிகள் இரண்டு பேரும், நேற்று பிற்பகல், புதுச்சேரி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments:
Post a Comment