Sunday, February 10, 2013

தூக்கு தண்டனையை எதிர்நோக்கும் ராஜீவ் கொலையாளிகள்: இந்தியா முழுவதும் 13 பேர் காத்திருப்பு!

Sunday, February 10, 2013
புதுடெல்லி::கடந்த ஆண்டு இறுதியில் மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப் மும்பை ஜெயிலில் தூக்கிலிடப்பட்டான். அடுத்த 2 மாதத்தில் டெல்லி பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவுக்கு நேற்று திகார் ஜெயிலில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நம் நாட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு என்ற முறையில் கருணை மனு அளிக்க உரிமை உள்ளது. அந்த கருணை மனு நேரடியாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர் உள்துறை அமைச்சகம் மற்றும் சம்மந்தப்பட்ட மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டறிவார்.

ஆனால் கருணை மனுவை நிராகரிக்கவோ அல்லது ஆயுள் தண்டனையாகவோ குறைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. அந்த வகையில் நாடு முழுவதும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 13 கைதிகளின் கருணை மனு ஜனாதிபதியின் பரிசீலனையில் உள்ளது.

ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவி ஏற்றதும் கருணை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறார். பதவி ஏற்ற குறுகிய காலத்திலேயே இதுவரை 4 கருணை மனுக்கள் மீது முடிவு எடுத்துள்ளார். அதில் கசாப், அப்சல் குருவின் கருணை மனுக்கள் அடுத்தடுத்து 2 மாத இடைவெளியில் நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு தூக்கு கைதியின் கருணை மனுவை ஏற்கனவே நிராகரித்து உள்ளார். ஒரு கைதிக்கு ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளார். பிரதீபா பட்டீல் ஜனாதிபதியாக இருந்த 2007-2012 கால கட்டத்தில் 22 வழக்குகளில் சம்பந்தப்பட்ட தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுத்தார். இதில் 19 வழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 35 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார். 3 வழக்குகளில் சம்பந்தப்பட்ட தூக்கு கைதிகளின் கருணை மனுக்களை நிராகரித்தார்.

தற்போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வசம் இன்னும் 13 தூக்கு கைதிகளின் கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளது. இதில் 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஜனாதிபதியின் கருணை மனு பட்டியலில் அடுத்த இடத்தில் ராஜீவ் கொலையாளிகள் முருகன், பேரளிவாளன், சாந்தன் ஆகிய 3 பேர் இடம் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் 22 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள். தற்போது 3 பேரும் வேலூர் சிறையில் தூக்கு தண்டனையை எதிர் நோக்கி உள்ளனர்.

1991-ல் ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்டனர். முருகனின் மனைவி நளினியும் கைது செய்யப்பட்டார். 4 பேருக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டுகளும் தூக்கு தண்டனையை உறுதி செய்தன. நளினிக்கு ஜெயிலில் குழந்தை பிறந்தது. அதன் எதிர்காலம் கருதி நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போடக்கூடாது என்றும் தூக்கு தண்டனை விதிப்பதையே ரத்து செய்யவேண்டும் என்றும் சில அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த அமைப்புகள் கசாப் தூக்கிலிடப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோல் அப்சல் குருவை தூக்கில் போட்டதையும் எதிர்த்தது.

சிறையில் இருக்கும் பேரளிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் தூக்கு தண்டனையை எதிர்த்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார். தூக்கு தண்டனை விதிக்கும் சட்டத்தையே நீக்கவேண்டும். இதன் மூலம் அப்பாவிகள் தூக்கு கயிற்றில் தொங்க விடப்படுவதை தடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார். அப்சல்குருவை தூக்கில் போட்டபோதும் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து எதிர்ப்பு தெரிவித்தார்.

1993-ல் கார் குண்டு வைத்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் மனீந்தர் சிங் பிட்டாவை கொலை செய்ய முயற்சி நடந்தது. அவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். 9 பேர் பலியானார்கள். இந்த வழக்கில் தேவிந்தர் பால் சிங்குக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவரது கருணை மனுவும் அடுத்து ஜனாதிபதியின் பரிசீலனைக்கு வருகிறது.

இதுதவிர 27 வருடமாக சிறையில் வாழும் தூக்கு கைதியான குர்மீத் சிங்கின் கருணை மனுவும் பரிசீலனையில் உள்ளது. பஞ்சாப் அகாலிதலி தலைவர் பியாந்த்சிங் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பல்வந்த் சிங் ரஜோனா, உ.பி.யில் தனது சகோதரரின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொன்ற கொலையாளி சுரேஷ் மற்றும் ராம்ஜி ஆகியோரின் தூக்கு தண்டனை கருணை மனுவும், பரிசீலனையில் உள்ளது.

கர்நாடகத்தில் 1994-ல் ஒரே குடும்பத்தில் 4 பேரை கொன்ற பிரவீன்குமார் என்ற கொலையாளிக்கு 2003-ல் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 19 வருடங்களாக சிறையில் இருக்கும் இவனது கருணை மனுவும் பரிசீலனைக்கு வருகிறது. மேலும் உ.பி.யில் பாலியல் குற்றத்துடன் கொலை செய்த குற்றத்துக்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 2 பேரின் கருணை மனுக்களும் அடுத்தடுத்து ஜனாதிபதியின் பரிசீலனை பட்டியலில் உள்ளது.

தமிழ் நாட்டில் கடைசியாக 1995-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந்தேதி ஆட்டோ சங்கர் சேலம் ஜெயிலில் தூக்கில் போடப்பட்டான். சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான இவன் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தான். அப்போது பல பெண்களை கொன்று வீட்டிலேயே புதைத்த குற்றத்துக்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment