Friday, January 11, 2013

அரசியலமைப்பை திருத்தும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு மட்டுமே உண்டு - நிமால் சிறிபால டி சில்வா!

Friday, January 11, 2013
இலங்கை::பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் பிரதம நீதியரசர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களில் ஒன்று அல்லது அதற்கு அதிகமானவைகளில் அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளதால், அவரை அப்பதவியிலிருந்து விலக்குவதற்கான பிரேரணையை இந்த சபையில் முன்வைக்கிறேன் என சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

எமது அரசியலமைப்பின் எந்த ஒரு பகுதியையும் நீக்கும் அதிகாரம் பிரதம நீதியரசர் மட்டுமல்ல எந்தவொருவருக்கும் இல்லை. அந்த அதிகாரம் முழுவதும் பாராளுமன்றத்திற்கே உள்ளது என்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஷிராணி பண்டாரநாயக் கவை பிரதம நீதியரசர் பதவி யிலிருந்து நீக்குவதற்கான பிரேரணையை முன் வைத்து பேசும் போதே அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்றில் நேற்று (10) விவாதங்கள் நடைபெற்றன. அமைச்சர் தொடர்ந்தும் பேசும் போது:

குற்றப்பிரேரணை தொடர்பாக நிலையியற் கட்டளைச் சட்டங்களுக்கு அமைய மிகத் தெளிவாக தெரிவுக்குழு கடமையாற்றி யுள்ளது. அரசும் இது தொடர்பில் மிகத் தெளிவாக செயற்பட்டுள்ளது. தெரிவுக்குழுவிலும் மிகத் தெளிவாக சாட்சியங்கள் பதிவாகியுள்ளன.

அரசயிலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டம் செய்யப்படும் போது ஒரு நபரை அவரது பதவியிலிருந்து நீக்குவதற்கான அதிகாரத்தை ஷிராணி பண்டாரநாயக்கவே அந்தச் சந்தர்ப்பத்தில் பெற்றுக்கொடுத்திருந்தார். ஒருவரை நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கிறது. எனினும் எமது ஜனாதிபதி அப்படிச் செய்யமாட்டார். 18 ஆவது திருத்தச் சட்டத்தில் அந்த ஏற்பாடு இருக்கிறது என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை.

நிலையியற் கட்டளை என்பது சட்டமல்ல என்று கூறப்படுகிறது. சரி இது சட்டமல்ல என்ற உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சரி என்று ஒரு பேச்சுக்கு எடுத்துக் கொள்வோம். ஜனாதிபதியினால் பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்ய முடியும் என்றும் சபை முதல்வர் தெரிவித்தார்.

பிரதம நீதியரசருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் 1, 4, 5 ஆகிய குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார். இது தொடர்பான தெரிவுக்குழுவின் அறிக்கையை விவாதித்து பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணையை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதே இந்த சபைக்கு உள்ள தற்போதைய கடமையாகும்.

முன்பிருந்த சோல்பரி மற்றும் குடியரசு அரசியலமைப்பின் பிரகாரம் விசாரணைகள் எதுவும் இன்றி பிரேரணை ஒன்றின் மூலம் மட்டுமே பிரதம நீதியரசர் ஒருவரை பதவி நீக்கம் செய்ய முடியும். அப்போது நிலையியற் கட்டளை, பாராளுமன்ற தெரிவுக்குழு என்று எதுவும் கிடையாது. பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணையின் பின்னரே 78 (அ) ஆம் நிலையியற் கட்டளை உருவாக்கப்பட்டது.

“சட்டம் அல்லது நிலையியற் கட்டளை” என்ற பதம் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தில் “சட்டமும் நிலையியற் கட்டளையும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை அரசியலமைப்பு வியாக்கியானமாக ஏற்க முடியாது. இது அரசியலமைப்பு திருத்தமாகும்.

அரசியலமைப்பை திருத்தும் அதிகாரம் சட்டவாக்கத்துக்கு அதாவது, பாராளுமன்றத்துக்கு மட்டுமே உண்டு, வேறு யாருக்கும் கிடையாது. அந்த அதிகாரம் உயர் நீதிமன்ற நீதியரசருக்கும் கிடையாது.

அத்துடன் 78 ஆவது நிலையியற் கட்டளை என்பது சட்டமல்ல என்று உயர் நீதிமன்றம் வியாக்கியானம் கூறியுள்ளது. உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதை சரி என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும், உயர் நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களை நீக்குவதற்கு வழியில்லை. அப்படியில்லை என்றால் ஜனாதிபதி யால் பதவி நீக்கம் செய்ய முடியும். அப்படி என்றால் பிரேரணை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பதவி நீக்கம் செய்ய முடியும்.

எனினும் ஜனாதிபதி அப்படி செய்யமாட்டார் என்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

No comments:

Post a Comment