Friday, January 11, 2013
புதுடில்லி::எல்லை கட்டுப்பாட்டு கோட்டில், இந்திய வீரர்கள் இருவர், பாகிஸ்தான் ராணுவத்தால், கொடுமையாக சித்ரவதை செய்து, கொல்லப்பட்ட விவகாரத்தை, "ஐக்கிய நாடுகள் சபை விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும்' என்ற, பாகிஸ்தான் கோரிக்கையை, மத்திய அரசு நேற்று நிராகரித்தது.
ஆனால், இந்திய ராணுவத்தால், பாகிஸ்தான் வீரர் கொல்லப்பட்டதாக கூறி, அந்த விவகாரத்தை, ஐக்கிய நாடுகள் சபை அமைப்பிடம், பாகிஸ்தான் நேற்று புகார் தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின், மென்டார் பகுதியில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டில், இம்மாதம் 8ம் தேதி, பாகிஸ்தான் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில், இரண்டு இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே அமலில் உள்ள, போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது குறித்து விவாதித்து முடிவெடுக்க, பிரதமர், மன்மோகன் சிங் தலைமையில், பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின், பத்திரிகையாளர்களை சந்தித்த, நிதியமைச்சர் சிதம்பரம், ""இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தை, சர்வதேச விவகாரமாக ஆக்க விரும்பவில்லை. எனவே, ஐ.நா., கண்காணிப்பு குழு விசாரணைக்கு இந்தியா சம்மதம் தெரிவிக்காது;
என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம்,'' என்று மட்டும் கூறினார். அதே நேரத்தில், "இம்மாதம், 6ம் தேதி, எல்லை கட்டுப்பாட்டு கோட்டில், இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், வீரர் ஒருவர் இறந்தார்; மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இந்த விவகாரத்தை, ஐ.நா., கண்காணிப்பு அமைப்பு விசாரிக்க வேண்டும்' என, பாகிஸ்தான் நேற்று புகார் தெரிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான, தற்காலிக எல்லை கோடான, எல்லை கட்டுப்பாட்டு கோட்டை, ஐக்கிய நாடுகள் அமைப்பின் கண்காணிப்பு குழு கண்காணித்து வருகிறது. இரு நாடுகளின் எல்லையிலும், இந்த அமைப்பு செயல்படுகிறது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்த, அமிர்தசரஸ் அருகே உள்ள, அட்டாரி எல்லையில், கன்டெய்னர் வளாகம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, சுங்க வரி கமிஷனர், கே.கே.சர்மா நேற்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment