Friday, January 11, 2013
சென்னை::தி.மு.க.,வில், மத்திய அமைச்சர் அழகிரிக்கு, "செக்' வைக்கும் வகையில், அவரை, சந்திக்க விரும்பாமல், தி.மு.க., தலைவர் கருணாநிதி தவிர்த்துள்ளார்.
தந்தை, மகன் இருவரிடையே, சமாதான தூதராக, கலைஞர், "டிவி' குழுமத்தின் தலைவர் அமிர்தம் நடத்திய பேச்சு, தோல்வி அடைந்துள்ளது. இதனால், ஏமாற்றத்துடன் அழகிரி நேற்று முன்தினம் டில்லிக்கு பறந்ததாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
"தமிழ் சமுதாய மேன்மைக்காக, எனக்கு பின் ஸ்டாலின் பாடுபடுவார்' என, கருணாநிதி தெரிவித்த கருத்திற்கு, அழகிரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். "தி.மு.க., சங்கர மடம் அல்ல; கட்சி பதவியை பொதுக்குழு கூடி முடிவு செய்யும்' என்றார்.தொடர்ந்து நடந்த, தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், அழகிரிக்கு ஆதரவாக பேசிய, மாவட்டச் செயலரை கருணாநிதி கண்டித்தார். "தலைமைக்கு எதிராக, பேசுபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், அழகிரியை மறைமுகமாக கருணாநிதி எச்சரித்தார்.
அதன்பின் நடந்த, செய்தியாளர்கள் சந்திப்பின் போது, "தலைவர் பதவிக்கு, ஸ்டாலின் போட்டியிட்டால், அவரது பெயரை முன்மொழிவேன்' என்று வெளிப்படையாக அறிவித்தார்."தி.மு.க.,வின் அடுத்த தலைவர் பதவி ஸ்டாலினுக்கு வழங்கப்படும்' என, திட்டவட்டமாக கருணாநிதி அறிவித்ததால், அழகிரி அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளார். அவரது ஆதரவாளர்களும் கோபமடைந்துள்ளனர்.
இது குறித்து, அழகிரி ஆதரவாளர்கள் கூறியதாவது:தி.மு.க., தலைவராக, கருணாநிதி இருக்கும் வரை, அவரை தவிர, வேறு யாரையும், தலைவராக நாங்கள் நினைத்து பார்க்க மாட்டோம். திருவள்ளுவர் சிலை பராமரிக்கக் கோரி, கன்னியாகுமரியில், தி.மு.க., நடத்தும் பொதுக்கூட்டத்தில், அழகிரி பங்கேற்க அழைப்பு விடுக்கவில்லை.
ஆனால், இந்தக் கூட்டத்தில் அழகிரி தன், ஆதரவாளர்களுடன் பங்கேற்க முடிவு செய்துள்ளார். மதுரையில், இம்மாதம், 25ம் தேதி நடக்கும் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில், அழகிரி பங்கேற்கிறார். அவரோடு, முன்னாள் அமைச்சர் துரைமுருகன், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஆகியோரும் பேசுகின்றனர்.
கருணாநிதியை சந்திக்க அழகிரி விரும்பினார்; ஆனால், அவரை சந்திக்காமல், கருணாநிதி தவிர்த்தார். மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தால், செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்பதால், காரில் தன் ஆதரவாளர்களுடன் சென்னைக்கு அழகிரி வந்தார்.
தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், இரு நாட்கள் தங்கியிருந்த அழகிரியால், கருணாநிதியை சந்திக்க முடியவில்லை. ஆனால், உடல் நலம் குறைவினால், கோபாலபுரம் வீட்டில், ஓய்வு எடுத்து வரும், தயாளுவை, அழகிரி மகன் துரை தயாநிதி சந்தித்து பேசியுள்ளார்.
இதற்கிடையில், கருணாநிதியின் மருமகனும், கலைஞர், "டிவி' குழுமத்தின் தலைவருமான அமிர்தம், சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்; அதுவும் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால், கருணாநிதியை சந்திக்காமல், நேற்று முன்தினம் அழகிரி டில்லி சென்று விட்டார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment