Friday, January 11, 2013
இலங்கை::புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களின் மேலுமோர் தொகுதியினரை சமூகத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு மேற்கொண்டுள்ளது.
இவர்கள் வவுனியாவிலுள்ள மரதமடு மற்றும் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையங்களில் தமது புனர்வாழ்வு நடவடிக்கைகளை நிறைவுசெய்துள்ளனர்.
இந்துக்களின் தைப்பொங்கள் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் ஜனவரி 13ஆம் திகதி புனர்வாழ்வளிக்கப்பட்ட 313 முன்னாள் புலி உறுப்பினர்களை விடுதலை செய்யவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட 10,375 முன்னாள் புலி உறுப்பினர்களின் சுயதொழிலை ஊக்குவிக்கும் முகமாக அரச வங்கிகளில் அதிகூடிய தொகையாக 250,000/= வழங்கும் திட்டத்தினை அரசாங்கம் அறிமுகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
புனர்வாழ்வை நிறைவு செய்தவர்களில் தெரிவுசெய்யப்பட்ட 125 பேருக்கு இக் கடனுதவி தொகை வழங்கப்படவுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்தது.
இவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில், புனர்வாழ்வு நிலையங்களில் திறமை அடிப்படையில் பல தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன.
30 வருடமாக நாட்டில் நிலவிய யுத்தம் 2009 மே இல் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட போது 11,800 முன்னாள் புலி உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் சரனடைந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment