Sunday, January 13, 2013

இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் மோதி பாம்பன் ரயில் பாலம் சேதம்

Sunday, January 13, 2013
ராமேஸ்வரம்::இந்திய கடற்படைக்கு சொந்தமான புதிதாக கட்டிய கப்பல், கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு சில நாட்களுக்கு முன் இழுவை கப்பல் மூலம் கட்டி இழுத்து செல்லப்பட்டது. பாக் ஜலசந்தி வழியாக பாம்பன் கடல் பகுதிக்கு கடந்த 9ம் தேதி வந்த போது பாம்பன் துறைமுக அதிகாரிகளின் அனுமதி கிடைக்காததால் ரயில் பாலத்தை கடக்க இயலாமல் 2 கப்பல்களும் வட கடல் பகுதியில் நிறுத்தப்பட்டன. கடலில் பலத்த காற்று வீசியதால் தடம் மாறிய கப்பல்கள் பாறையில் சிக்கி நின்றன. கடந்த 4 நாட்களாக சிக்கிய கப்பல் எஸ்.பி-2 பாறையில் இருந்து விலகி கடல் நீரோட்டத்தால் இழுக்கப்பட்டு இன்று அதிகாலை 1.30 மணியளவில் பாம்பன் ரயில் பாலத்தின் மீது மோதியது. இதனால் ரயில் பாலத்தில் மிகப்பெரிய அதிர்வு ஏற்பட்டது. அதிர்வு சத்தம் கேட்டு தூக்கு பால கண்காணிப்பு இரவு பணி ஊழியர்கள் நயினார் முகமது, விக்டர் ஆகியோர் பாலத்தை பார்வையிட்டு, பாம்பன், மண்டபம் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ராமேஸ்வரத்துக்கு இன்று அதிகாலை வரவேண்டிய மதுரை பாசஞ்சர், சேது எக்ஸ்பிரஸ் ஆகியவை மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பாசஞ்சர் ரயிலும் நிறுத்தப்பட்டது.

கப்பல் மோதியதில் பாம்பன் ரயில் பாலத்தின் இரும்பு கர்டர்களை தாங்கி நிற்கும் 121வது தூண் தனியாக பெயர்ந்து விலகியது. இதையடுத்து பாம்பன் பாலத்தை செப்பனிடுவது குறித்து உயரதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். மோதிய கப்பலை விசைப் படகுகள் மூலம் கட்டி இழுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 1914ல் திறக்கப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தில் கப்பல் மோதி சேதமாவது இதுவே முதல் முறை.

No comments:

Post a Comment