Tuesday, January 15, 2013

பாதுகாப்பற்ற நிலையில் இந்தியாவும் இந்திய எல்லைகளும்,: காங்கிரஸ்க்கு நெருக்கடி கொடுக்கும் பா.ஜ!

Tuesday, January 15, 2013
புதுடில்லி::இந்திய எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், இந்திய ராணுவத்தினர் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதல், நாட்டில் பெருகி வரும் குற்றங்கள் ஆகியவற்றை தடுக்க காங்கிரஸ் தலைமையிலான அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பா.ஜ., தலைவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். நாட்டின் பாதுகாப்பற்ற சூழலை கொண்டு காங்கிரஸ் அரசிற்கு பா.ஜ., பல்வேறு தரப்பிலும் நெருக்கடிகள் கொடுத்து வருகிறது.

ஜோஷி குற்றச்சாட்டு :

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைமையிலான ஆட்சியில் நாட்டின் எல்லைகளிலும், நாட்டுக்குள்ளும் பாதுகாப்பற்ற நிலை நிலவுவதாக பா.ஜ., தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார். எல்லை பகுதிகளில் அயல் நாட்டினரின் ஊருவல் உள்ளதாகவும், நாட்டிற்குள் மாவோயிஸ்டுகள் போன்ற பயங்கரவாத சக்திகள், குற்றவாளிகள், ஊழல்வாதிகளே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வாஜ்பாய் ஆட்சியின் போது இந்தியா, உலகின் மிகப் பெரிய சக்தியாக திகழ்ந்தது எனவும், காங்கிரஸ் அரசின் தவறான கொள்கைகளால் உலக அரங்கில் இந்தியாவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மன்மோகன் அரசு நாட்டின் பொருளாதாரத்தை சரிய செய்து விட்டதாகவும், இந்திய ரூபாயின் மதிப்பையும் அது குறைத்து விட்டதாகவும் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார்.

குப்தா பேச்சு :

காங்கிரஸ் ஆட்சியில் தலைநகரில் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டதாக டில்லி பா.ஜ., தலைவர் விஜேந்திர குப்தா தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் உடல் நீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பு இல்லாமல் உணர்வதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். டில்லியில் நடைபெற்ற கொடூர பாலியல் பலாத்கார சம்பவத்தில் இருந்து காங்கிரஸ் எந்த ஒரு பாடத்தையும் கற்றுக் கொள்ளவும் இல்லை, தனது போக்கை மாற்றிக் கொள்ளவும் இல்லை எனவும் தெரிவித்துள்ள குப்தா, டில்லியில் பாலியல் பலாத்காரங்களும், கொலைகளும் தொடர்ந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சுஷ்மா ஆவேசம் :

பாகிஸ்தான் ராணுவத்தால் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இந்திய ராணுவ வீரர் ஹேமராஜின் வீட்டிற்கு பா.ஜ., தலைவர்கள் கட்காரி, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங் ஆகியோர் நேற்று சென்றிருந்தனர். பின்னர் சுஷ்மா, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது : துண்டிக்கப்பட்ட ஹேமராஜின் தலையை பாகிஸ்தான் ராணுவம் திருப்பி தராவிட்டால், பாகிஸ்தானில் இருந்து 10 தலைகளை இந்தியா எடுக்க வேண்டி இருக்கும்; இது போன்ற நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டு அமைதியாக, வாய் மூடி இருக்க வேண்டுமா? ஹேமராஜின் மனைவியின் துயரை போக்கவும், உயிரை காக்கவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும்; ஒரு பலவீனமான அரசை நாட்டு மக்கள் கேட்கவில்லை; பாகிஸ்தான் வீரர்கள் நமது எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து நமது வீரர்களின் தலையை வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்; இதற்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை; இது உண்மையின் வெட்கப்பட வேண்டிய செயல்; இதற்கு இறந்த வீரர்களின் குடும்பத்தினரிடமும், நாட்டு மக்களிடமும் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்; அதே சமயம் இந்த கொடூர சம்பவத்திற்கு பழி தீர்த்தே ஆக வேண்டும். இவ்வாறு சுஷ்மா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment