Friday, January 11, 2013
சென்னை::கர்நாடக அணைகளில், தற்போது இருப்பில் உள்ள, 16 டி.எம்.சி., தண்ணீர் , மே மாதம் வரை, அம்மாநில குடிநீருக்காக தேவைப்படுகிறது. அதனால், ஜனவரியில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி, உத்தரவிட முடியாது என, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் கைவிரிக்கப்பட்டது.
"காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உடனடியாக, அரசிதழில் வெளியிடும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவும் மனு செய்தது.இந்த மனுக்களை, சமீபத்தில் விசாரித்த சுப்ரீம் கோர்ட், "காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிடாதது ஏன்' என, மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
இது தொடர்பாக, வரும், 31ம் தேதிக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என, உத்தரவிட்டதோடு, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தையும் விரைவில் கூட்டி, டிசம்பர் வரையில், தமிழகத்திற்கும், கர்நாடகாவுக்கும் எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை கணக்கிட்டு, அறிவிக்க வேண்டும் என்றும் கூறியது. இந்நிலையில், தமிழகத்தின் சம்பா சாகுபடிக்காக, ஜனவரி மாதத்திற்கு தேவையான தண்ணீரின் அளவை முடிவு செய்வதற்காக, காவிரி கண்காணிப்பு குழுவின், 32வது கூட்டம், டில்லியில் நடந்தது.
மத்திய நீர்வளத்துறை செயலரும், காவிரி கண்காணிப்பு குழுவின் தலைவருமான, துருவ் விஜய் சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழக அரசு சார்பில், தலைமை
செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினரும், கர்நாடகா தரப்பில், அம்மாநில தலைமை செயலர் எஸ்.வி.ரங்கநாத் தலைமையிலான குழுவினரும் கலந்து கொண்டனர். கேரளா மற்றும் புதுச்சேரி அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர். கூட்டம் முடிந்து, 90 நிமிடங்கள் கழித்து, துருவ் விஜய் சிங் தன் முடிவை அறிவித்தார்.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை, விரைவில் மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும் என, கூட்டத்தில் பங்கேற்ற, தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் அதிகாரிகள் வலியுறுத்தினர். கர்நாடக மாநில அதிகாரிகளோ, இது தொடர்பாக, மத்திய அரசின் உத்தரவை பெற்று, அடுத்த இரண்டு நாட்களில் தெரிவிப்பதாகக் கூறினர்.
இதற்கு பதில் அளித்த துருவ் விஜய் சிங்,""காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிடுவது குறித்து, மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக, விரைவில் முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவுப்படி, ஜனவரி மாதத்தில், 1.51 டி.எம்.சி., தண்ணீரை, தமிழகத்திற்கு கர்நாடகா தர வேண்டும். ஆனால், கர்நாடக அணைகளில், தற்போதுள்ள தண்ணீர் இருப்பு நிலவரங்களை கவனிக்கும் போது, தண்ணீர் திறந்து விடும்படி உத்தரவிட வாய்ப்பு இல்லை.
அதனால், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக, எந்த விதமான முடிவையும், கண்காணிப்பு குழு எடுக்கவில்லை. கர்நாடக
அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை என்றாலும், கர்நாடகாவில் உள்ள அணை மற்றும் மேட்டூர் அணைக்கு இடைப்பட்ட பகுதிகளில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து, தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்காமலேயே, இம்மாதம், 1ம் தேதி முதல், 9ம் தேதி வரை, மேட்டூர் அணைக்கு 1.6 டி.எம்.சி., தண்ணீர் வந்துள்ளது என, தெரிவிக்கப்பட்டது.
மேலும், காவிரி நதியுடன் தொடர்புடைய மாநிலங்கள் அனைத்தும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பாசனத் தேவைகளை விட, குடிநீருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளதால், இதை செய்ய வேண்டும் என்றும், குழுவின் கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
இதன் மூலம், காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், தமிழகத்திற்கு சாதகமான முடிவு எடுக்கப்படும் என்ற, எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனது.
தமிழக அதிகாரிகள்தெரிவித்தது என்ன?: கூட்டத்தில், பங்கேற்ற தமிழக அரசு பிரதிநிதிகள், "கர்நாடக அணைகளில், 16 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு உள்ளது. இதில், 4 டி.எம்.சி, தண்ணீரை, குடிநீர் தேவைகளுக்கு வைத்துக் கொண்டு, குறைந்த பட்சம், 12 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும்' என, வலியுறுத்தினர்.
இதற்கு பதில் அளித்த துருவ் விஜய் சிங், ""கர்நாடக அணைகளில், இந்த காலகட்டத்தில், 31 டி.எம்.சி., தண்ணீர் இருக்க வேண்டும். ஆனால், இப்போது, 16 டி.எம்.சி., தண்ணீரே உள்ளது. கர்நாடக அரசு சட்டத்திற்கு புறம்பாக அதிக அளவு தண்ணீரை பயன்படுத்துகிறது. இருந்தாலும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது,'' என்றார்.

No comments:
Post a Comment