Sunday, January 13, 2013

பொங்கல் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து!

Sunday, January 13, 2013
சென்னை::பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கவர்னர் ரோசய்யா: மகிழ்ச்சிகரமான இந்த பொங்கல் நன்னாளில், என் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தமிழக மக்களுக்கும், நாட்டின் மற்ற பாகங்களில் வாழும் தமிழக மக்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன். இந்த நாளில் இயற்கை, சுற்றுப்புறத்தை பாதுகாக்க உறுதியேற்போம். அறுவடை திருநாளில், நாட்டில் அமைதியும், முன்னேற்றமும், செழிப்பும் ஏற்பட வாழ்த்துக்கள். முதல்வர் ஜெயலலிதா: உலகெங்கும் வாழும் தமிழர்கள் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளில், அனைவருக் கும் எனது இதயம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். இல்லங்கள் தோறும் பொங்கட் டும் பொங் கல். இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள் என்று மனமார வாழ்த்தி, என் அன்புக்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கி கொள்கிறேன்.

திமுக தலைவர் கருணாநிதி: தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் திருநாள்! இந் நன்னாளை உற்றார், உறவினர், நண்பர்களின் வாழ்த்தொலி முழங்க குடும்பத்தோடு கொண்டாடி மகிழும் தமிழ் மக்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். ஆனால், இன்றைய அதிமுக அரசின் தவறான அணுகுமுறைகளால் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காமல், அரசு தொடங்கிய வல்லூர், வடசென்னை, மேட்டூர் அனல்மின் நிலைய பணிகளை விரைவுபடுத்தி செயல்பாட்டுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கைளை மேற்கொள்ளாமையால் பம்பு செட்டுகளுக்கு மின்சாரம் கிடைக்காமல் விவசாயம் முற்றிலும் முடங்கி தமிழக விவசாயிகள் வேதனையில் மூழ்கி கிடக்கின்றனர். இந்த நிலையை எண்ணும் போது இதயம் விம்முகிறது. இரு விழிகளிலும் நீர் அருவியாகிறது. எனினும், புலரும் புத்தாண்டு கைகொடுக்கும்! இளம் தளிர்கள் எழுச்சி பெறும்! புதிய வாழ்வு உதயமாகும்! எனும் நம்பிக்கையுடன் தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்திட உளமார வாழ்த்துகிறேன். பாமக ராமதாஸ்: தமிழர்களின் பண்பாட்டையும், பெருமையையும் உலகிற்கு எடுத்துக்கூறும் திருநாட்களான பொங்கல் திருநாளும், தமிழ் புத்தாண்டும் உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகின்றன. இத்திருநாட்களைக் கொண்டா டும் தமிழர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

பாஜ பொன்.ராதாகிருஷ்ணன்:

தமிழர் திருநாளாம் தை திங்கள் முதல் நாளில் தமிழக மக்கள் அனை வருக்கும் தாழ்பணிந்த வணக்கங் களையும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். இரவை அகற்றும் இரவியின் அருளும், உலகை படைத்த அன்னை சக்தியின் அருளும் இம்மியும் குறையாது தை பொங்கல் முதல் கிடைக்க பிரார்த்தித்து அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். மயிலை சி.பெரியசாமி: தமிழர்களின் புதிய ஆண்டில் சிறப்பாக வாழ நமது சிந்தனையை நல்வழி செலுத்தி, உழைப்பை மூலதனமாக்கி வாழ்வை செழிப்பாக்கிட சபதம் ஏற்போம். வலிமையான பாரதமும் வளமான தமிழகமும் உருவாகட்டும். பாரிவேந்தர் (இந்திய ஜனநாயக கட்சி): மகிழ்ச்சி பொங்க பொங்கலை கொண்டாடலாம் என நினைத்திருந்த விவசாய குடும் பங்கள் வறட்சியாலும் கடனாலும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இனி வரும் காலம் விவசாயிகளுக்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சி பொங்கும் காலமாக இருக்கும் என நம்பிக்கையில் பொங்கல் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.

ஹெச். வசந்தகுமார் (தமிழக காங்கிரஸ் வர்த்தக பிரிவு): உலக அரங்கில் உழவர்களின் மாண்பை உயர்த்திட செய்யும் தை பொங்கல் நாளில் அனைவருக் கும் வாழ்த்துகள். புதுப்பானை, புத்தரிசி, செங்கரும்பு என மணக்கும் பொங்கலுடன் இயற்கையை வணங்குவோம். மேலும், அகில இந்திய கட்டிட தொழிலாளர் மத்திய சங்க பொது செயலாளர் பன்னீர் செல்வம், தமிழக அரசின் மண்பாண்ட தொழிலாளர் வாரியத்தின் முன்னாள் தலைவர் சேம.நாராயணன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவன தலைவர் சேதுராமன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், காந்திய மக்கள் இயக்க நிறுவன தலைவர் தமிழருவி மணியன், ஐக்கிய ஜனதா தள தலைமை பொது செயலாளர் ராஜகோபால், இந்திய தேசிய முஸ்லீம் லீக் தலைவர் ஜவஹர் அலி உள்பட பலர் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment