Saturday, January 12, 2013

பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றத்தினால் ரிட் உத்தரவு வழங்க முடியாது -அமைச்சர் ரவூப் ஹக்கீம்!

Saturday, January 12, 2013
இலங்கை::பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றத்தினால் ரிட் உத்தரவு வழங்க முடியாது. அரசியலமைப்பின் 77 ஆவது சரத்தின் பிரகாரம் பாராளுமன்ற த்திற்கு எதிராக இவ்வாறு தீர்ப்பளிக்க முடியாது என்று நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்கு தெரிவுக்குழு அமைத்து செயற்பட முடியும். சட்ட அடிப்படையை பொருட்படுத்தாதே, நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் நீதிமன்றத்தினால் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு சவால் விட முடியாது என்றும் கூறினார்.

குற்றப்பிரேரணை தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர், இன்று எழுந்துள்ள குழப்ப நிலை தீர்க்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்ட போதும் அவை பயனளிக்க வில்லை. குற்றப்பிரேரணை வேறு நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்பட வில்லை.

தெரிவுக்குழுக்கு எதிராக நவம்பர் மாதம் முதல் பல வழக்குகள் தொடரப்பட்டன. பிரதம நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் விளக்கமளித்தார்.

இந்த வழக்கில் வியாக்கியானம் தொடர்பான பிரச்சினை இருக்கவில்லை. உச்சநீதிமன்ற வியாக்கியானம் தொடர்பில் சிக்கல் உள்ளது.

பாராளுமன்றத் தெரிவுக்குழு நீதிமன்றமாக செயற்படுவதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. பாராளுமன்றத்திற்கு நீதிமன்ற அதிகாரமிருக்குமானால் நிலையியற் கட்டளை மூலம் அதனை மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அமெரிக்காவில் பெடரல் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் சட்டமா அதிபர் இங்கு விளக்கமளித்தார். நீதிபதி ஒருவருக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பான குறித்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்தது. பாராளுமன்றத்திற்கு அது குறித்து விசாரணை செய்ய முடியும் என நீதிமன்றம் அறிவித்தது. அவுஸ்திரேலியா விலும் இதுபோன்ற தீர்ப்பு வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளையின் 78 அ சரத்தை உச்ச நீதிமன்றம் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை. குற்றப்பிரேரணை பாராளுமன்றத்துடனும் நீதிமன்றத்துடனும் தொடர்புபட்டுள்ள போதும் பாராளும ன்றத்திற்கே இது தொடர்பில் அதிகாரம் உள்ளது. அமெரிக்காவில் செனட் சபைக்கு சாட்சி விசாரணை மேற்கொள்ள முடியும். இந்த அதிகாரம் தொடர்பில் அங்கு சவால் விடப்படவில்லை.

நிலையியற் கட்டளையை ஒதுக்கியே மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இவ்வாறு தீர்ப்பு வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? இது குறித்து சட்டமா அதிபர் கேள்வி எழுப்பியிருந்தார். தெரிவுக்குழுவின் அறிக்கைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் ரிட் உத்தரவு வழங்கியது. பாராளுமன்றத்தில் குற்றப்பிரேரணை தொடர்பில் விவாதம் நடத்தப்படுவதை தடுக்கவே இவ்வாறு செய்யப்பட்டது.

பாராளுமன்றத்திற்கே மக்கள் ஆணை உள்ளது. பாராளுமன்ற அதிகாரம் தொடர்பில் யாப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பாராளுமன்ற அதிகாரம் தொடர்பில் நிலையியற் கட்டளையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்திற்கு தெரிவுக்குழு நியமித்து செயற்பட முடியும் என்ற சட்ட அடிப்படையை மேன்முறையீட்டு நீதிமன்றம் பொருட் படுத்தவில்லை.

நீதிமன்றத்தினால் பாராளுமன்ற நடவடிக்கையை தடுக்க முடியாது. உச்ச நீதிமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் தடங்கல் ஏற்படுத்த முடியாது. இது தொடர்பில் அரசியலமை ப்பின் 77 ஆவது சரத்து தெளிவாக கூறுகிறது. அரசியமைப்பின் 77 ஆவது சரத்தின் பிரகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பாராளுமன்றத்திற்கு எதிராக இவ்வாறு தீர்ப்பு வழங்க முடியாது. பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு எந்த வகையிலும் சவால் விட முடியாது. பாராளுமன்றத்திற்கு எதிராக நீதிமன்றத்தி னால் ‘ரிட்’ உத்தரவு வழங்க முடியாது.

பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment