Monday, January 07, 2013
இலங்கை::இலங்கையில் யுத்தத்திற்கு பின்னர்; அரசியல் ரீதியிலான நல்லிணக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அத்துடன் இங்கு மனித உரிமை மீறல்களும் மீறப்படுகின்றன. இது தொடர்பில் கனடா கரிசனையினை காட்டி வருகின்றது" என இலங்கையில் தங்கியிருக்கும் கனேடிய குடியுரிமை, குடிவரவு மற்றும் பல்லின கலாச்சார அமைச்சர் ஜேசன் கெனீ தெரிவித்தார்.
தான் சந்திக்கும் இலங்கை அதிகாரிகளிடம் இது தொடர்பாக தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
யுத்தத்தின் போது இரு தரப்பினரும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை தீவிரமாக ஆராய வேண்டும் எனவும் கனேடிய அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.
"அரசியல் நல்லிணக்க செயற்பாடுகளில் உறுதியான முன்னேற்றங்களை வெளிப்படுத்த வேண்டும். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அங்கத்துவ நியதிகளுக்கு இணங்கி ஒழுக வேண்டும் எனவும் கனடா இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றது" என அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மனித உரிமைகள் தொடர்பாக இலங்கையில் மாத்திரமா கவனம் செலுத்துகின்றீர்கள்? என ஊடகவியலாளர் ஒருவர் கனேடிய அமைச்சரிடம் வினவியதற்கு, "பொதுநலவாய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எமது அரசாங்கம் தொடர்ந்த குரல்கொடுக்கும்" என்றார்.

No comments:
Post a Comment