Sunday, January 6, 2013

கனடாவுக்கு இலங்கையில் இருந்து செல்லும் சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்தல் தொடர்பில் குடிவரவு கொள்கை திருத்தங்கள்!

Sunday, January 06, 2013
இலங்கை::எதிர்வரும் வார இறுதியில் இலங்கை வரும் கனடாவின் குடிவரவுத்துறை அமைச்சர் ஜேசன் கென்னி அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

கனடாவுக்கு இலங்கையில் இருந்து செல்லும் சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்தல் தொடர்பில் இதன்போது அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஏற்கனவே 2010 ஆம் ஆண்டில் 74 பேரைக்கொண்ட அகதிகள் கப்பல் மற்றும் 500 பேரைக்கொண்ட கப்பல் என்பன இலங்கையில் இருந்து சென்றமை பேச்சுவார்த்தையின் போது முக்கிய கருவாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இதுதவிர, கனடாவின் குடிவரவு கொள்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குறித்து அமைச்சர் கென்னி, இலங்கை அதிகாரிகளை தெளிவு படுத்தவுள்ளார்.

2010 ஆம் ஆண்டு முற்பகுதியில் 340 குடியேறிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

எனினும். அந்த காலப்பகுதியில் சென்ற இலங்கை சட்டவிரோத குடியேறிகளில் 13 சதவீதமானவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.

பெரும்பாலானவர்கள் யுத்த காலப்பகுதியிலேயே வெளிநாடுகளுக்கு புகலிடம் தேடி சென்றனர்.

இதேவேளை, இந்த வருடம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கனேடிய பிரதமர் பிரசன்னமாவாரா என்பது தொடர்பாகவும் இதன்போது பேசப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தாம் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று பிரதமர் ஹாப்பரின் நிர்வாகம் அறிவித்திருந்தது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் குறித்து இலங்கை அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி செயற்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாக கனேடிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கிறிஸ்டின் ரோய் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment