Tuesday, January 8, 2013

பொங்கல் பரிசு பை வழங்கும் திட்டம் ஜெயலலிதா நாளை துவக்கி வைக்கிறார்!

Tuesday, January 08, 2013
சென்னை::தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு பை திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நாளை கொடநாட்டில் துவக்கி வைக்கிறார். அதே நேரத்தில் மற்ற இடங்களிலும் நாளை முதல் பொங்கல் பை வழங்கப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில், அரிசி பெறும் ஒரு கோடியே 84 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.100 ரொக்கப்பணம் அடங்கிய ‘பொங்கல் பரிசு பை’ வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கடந்த சனிக்கிழமை அறிவித்தார்.

இதையொட்டி ரேஷன் கடைகளில் உள்தாள் ஒட்டும் பணி இன்று முதல் 17ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படும் என்று உணவு அமைச்சர் காமராஜ் நேற்று அறிவித்தார். இந்நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், அரிசி பெறும் சுமார் 1 கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நாளை பிற்பகல் 2.30 மணிக்கு நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் உள்ள கோத்தகிரி கூட்டுறவு பண்டக சாலையின் கோடநாடு நியாய விலை கடையில் துவக்கி வைப்பார்.

அப்போது, பயனாளிகளுக்கு இலவச வேட்டிகள் மற்றும் சேலைகளையும் வழங்குவார். இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பிற இடங்களிலும் நாளை முதல் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை அமைச்சர்கள் துவக்கி வைப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து உணவு வழங்கல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “பொங்கல் பரிசு பை வழங்க உத்தரவு வந்துள்ளது. இதற்காக தயாரிக்கப்பட்ட சிறப்பு பையில் ஒரு கிலோ பச்சரிசியும், அந்த பைக்குள் ஒரு கிலோ பாக்கெட் சர்க்கரை மற்றும் ரூ.100 ரொக்கப் பணம் அடங்கிய கவரும் வைக்கப்பட்டு ரேஷன் கடைகளில் தயாராக வைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பை வழங்கப்படும்’’ என்று கூறினர்.

No comments:

Post a Comment