Sunday, January 27, 2013

ஐ.நா.சபை நாடு உறுப்பினர்களிடம் டெசோ தீர்மான நகலை கொடுக்க மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்!

Sunday, January 27, 2013
இலங்கை::மீனம்பாக்கம்::ஐ.நா. சபை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளிடம் டெசோ மாநாட்டு தீர்மானங்களை கொடுப்பதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.

சென்னையில் நடந்த டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல்களை வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகளின் தூதரக அதிகாரிகளிடம் கொடுப்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சுகவனம் எம்.பி. ஆகியோர் இன்று காலை 6.40 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார்.

முன்னதாக விமான நிலையத்தில் நிருபர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: டெசோ மாநாட்டு தீர்மான நகல்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், ஐ.நா.சபையின் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து வழங்க உள்ளோம். ஐ.நா. உறுப்பு நாடுகளின் அதிகாரிகளிடம் ஏற்கனவே நேரம் கேட்டிருந்தோம். அவர்கள் நேரம் ஒதுக்கி தந்துள்ளனர். அவர்களை நேரில் சந்தித்து நகல்களை அளிக்க உள்ளோம்.

மேலும் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் ஆகியவற்றை எடுத்து கூறுவோம். இதில் நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். என்னுடன் திருமாவளவன், கி.வீரமணி, சுகவீரபாண்டியன் மற்றும் டெசோ உறுப்பினர்களும் அமைச்சர் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்திக்கின்றனர். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

No comments:

Post a Comment