Monday, January 14, 2013
சென்னை::சுபத்துடன் துவங்குவோம்: சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளே மகரசங்கராந்தி. இந்நாளை தமிழகத்தில் பொங்கல் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். தேவலோக காலக்கணக்குப்படி, நம்முடைய ஓராண்டு என்பது, அவர்களுக்கு ஒருநாள். இதில், தைமுதல் ஆனி வரையுள்ள ஆறுமாதங்கள் பகல்பொழுது. இதனை உத்ராயணம் என்று குறிப்பிடுவர். இந்த காலத்தில் சூரியன் வடதிசை நோக்கிச் சஞ்சரிக்கும். ஆடிமுதல்மார்கழி வரை இரவுப்பொழுது. அப்போது சூரியன் தெற்குநோக்கி சஞ்சரிக்கும்.உத்ராயண காலத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவது சிறப்பு.
சூரிய மந்திரம் சொல்வோமா!
நம: ஸவித்ரே ஜகதேச சக்ஷúஷே
ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாச ஹேதவே
த்ரயீமயாய த்ரிகுணாத்ம தாரிணே
விரிஞ்ச நாராயண சங்கராத்மனே
ஜபாகு ஸும ஸங்காசம்
காஸ்யபேயம் மஹாத்யுதிம்
த்வாந்தாரிம் ஸர்வ பாபக்னம்
ப்ரணதோஸ்மி திவாகரம்
என்ற சூரிய மந்திரத்தைச் சொல்ல வேண்டும். இதன் பொருளையும் சொல்லலாம்.
பொருள்: உலகிற்குக் கண்ணாக இருப்பவனே! முத்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்பவனே! வேத வடிவமே! முக்குணங்களைப் பெற்றவனே! பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தியாகவும் திகழும் சூரியனே! உமக்கு நமஸ்காரம். காஷ்யப முனிவரின் மகனே! செம்பருத்திப்பூவின் நிறத்தைக் கொண்டவனே! இருளின் எதிரியே! பேரொளி உடையவனே! பாவங்களைப் போக்குபவனே! திவாகரனே! உம்மைப் போற்றுகிறேன்.இந்த மந்திரத்தை ஜெபித்தால் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் உண்டாகும்.
சூரியவழிபாட்டுக்கு உகந்த நாள் ஞாயிறு. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்கள் சிறந்தவை. திதிகளில் வளர்பிறை சப்தமி ஏற்றது. இந்த நாட்களில் காலையில் நீராடிய
பிறகு, கிழக்கு நோக்கி நின்று சூரியனை வணங்க வேண்டும்.
பார்த்த பின் சாப்பிடுங்க:
தாபனீய உபநிஷத் என்னும் நூலில் நரசிம்மருக்கு மூன்று கண்கள் உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் வலக்கண் சூரியன், இடக்கண் சந்திரன், நடுக்கண் அக்னியாக விளங்குகிறது. புருஷ சூக்தம் என்ற நூல், விஷ்ணுவின் கண்களில் இருந்து சூரியன் உண்டானதாகச் சொல்கிறது. சூரியனை வணங்காமல் சாப்பிடுவது கூடாது என வேதம் கூறுகிறது. சூரியவழிபாடைத் தவறாமல் செய்தால் வாக்குவன்மை, ஆரோக்கியம் உண்டாகும். சூரியனைக் காணாத நாள் ஒவ்வொன்றும் வீண்நாளே என்கிறார் காஞ்சிப் பெரியவர்.
கன்னி பூஜை:
பொங்கலன்று இரவில் கன்னி பூஜை நடத்தினால் குடும்பம் தழைக்கும். "கன்னி' என்பது நம் வீட்டில் வயதுக்கு வராமல் இறந்துபோன குழந்தைகளைக் குறிக்கும். இந்த குழந்தைகளின் வயதை அனுசரித்து புதிய பாவாடை, சட்டை, இனிப்பு வகைகளை திருவிளக்கின் முன் படையுங்கள். சேலை வைத்தும் வணங்கலாம். இறந்த கன்னியரை மனதில் நினைத்து பூஜை செய்யுங்கள். புத்தாடைகளை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள். இனிப்பை குழந்தைகளுக்கு கொடுங்கள்.
முன்னோரை வழிபடுங்க:
பொங்கலன்று மதியம் முன்னோரை அவசியம் வழிபட வேண்டும். திருவிளக்கின் முன், நம் முன்னோரின் படங்களை வைத்து மாலை அணிவியுங்கள். படம் இல்லாவிட்டால், அவர்கள் அங்கே எழுந்தருளியிருப்பதாக பாவனை செய்து கொள்ளுங்கள். ஒரு இலையில், வெற்றிலை, பாக்கு, பழம்,வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், இனிப்பு, கார வகைகள், முன்னோர் விரும்பி சாப்பிட்ட காய்கறி வகைகளைப் படையுங்கள்.
தைமாதம் பிறக்கும் நேரம் நாடு எப்படி இருக்கும்?
தைமாதம் சுக்லபட்சம் திரிதியை திதி, அவிட்டம் நட்சத்திரம், சித்தயோகம், கும்பலக்னம், கும்பராசி, செவ்வாய் ஓரையில் காலை 9.28க்கு பிறக்கிறது. அன்று திங்கள்கிழமை. அந்நாளில் சூரியன் மகரராசியில் நுழைகிறார். இதை "மகர சங்கராந்தி' என்பர். "சங்கராந்தி' என்றால் "நுழைதல்'. ஒவ்வொரு ஆண்டும் வரும் மகரசங்கராந்திக்கு, ஒரு தேவதையை ஜோதிட சாஸ்திரத்தில் நியமித்துள்ளனர். இந்த தேவதையை "புருஷர்' என்பர். இவ்வாண்டுக்குரிய புருஷரின் பெயர் தூவங்கிஸி. இவர் பூமியை நோக்கி கிழக்கே அமர்கிறார். இதனால், நாடெங்கும் நல்ல மழை பொழியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழமையான கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும். கேரள கோயில்களுக்குபக்தர்கள் விரும்பிச் செல்வர். குடும்பங்களில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வியாபாரிகள் அமோக லாபம் காண்பர். கால்நடை வளர்ப்பில் லாபம் உயரும். கடல்வாணிபத்தில் ஆதாயம் பெருகும். தொழில் துறையில் வெளி நாட்டவர்களின் முதலீடு கூடும். வறுமைக்காட்டிற்கு கீழ் வாழும் மக்கள் அரசிடம் சலுகை பெறுவர். தொல்பொருள் ஆராய்ச்சியில் வளர்ச்சி ஏற்படும். தீவிரவாதிகளின் ஆதிக்கம் குறையும். சுமத்ரா, ஜப்பான், இலங்கை, அந்தமான், கன்னியாகுமரி, சென்னை, நாகபட்டினம், காரைக்கால், புதுச்சேரி, கடலூர், மதுரா ஆகிய இடங்களில் கடல்கொந்தளிப்பால் பாதிப்பு ஏற்படும். அரசுக்கு பணநெருக்கடிஏற்படும். செல்வந்தர்கள் அரசின்கெடுபிடிக்கு ஆளாவர்.
உங்கள் நட்சத்திரத்துக்கு என்ன பலன்?
தைமாதம் பிறக்கும் நேரத்தின் அடிப்படையில், அவரவர் நட்சத்திரத்துக்குரிய பலன்கள் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த தை வரை இது பொருந்தும்.அசுவினி, பரணி, கிருத்திகை, பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தினருக்கு பணவரவு நன்றாக இருக்கும். ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரையில் பிறந்தவர்கள் வீடு, பணியில் இடமாற்றம் காண்பர். புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம் நட்சத்திரத்தினர் மனை, பூமியால் ஆதாயம் பெறுவர். விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தினர் அரசு வகையில் ஆதாயம், பட்டம், பதவி பெற்று வாழ்வில் உயர்வர். கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் அஸ்தம், சித்திரை, சுவாதியில் பிறந்தவர்களே. இவர்கள், சட்டத்துக்கு விரோதமாக எதுவும் செய்து மாட்டிக் கொள்ளக்கூடாது. அரசாங்க விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திருவோணம், அவிட்டம், சதயம் நட்சத்திரத்தினருக்கு பிரச்னை எதுவும் இல்லை என்றாலும், செலவு அதிகமாக இருக்கும்.


No comments:
Post a Comment