Sunday, January 13, 2013

இந்தியா - பாக் படைகள் மீண்டும் துப்பாக்கி சண்டை : ஊடுருவல் முயற்சி முறியடிப்பு!

Sunday, January 13, 2013
ஜம்மு::காஷ்மீரின் பூஞ்ச் பகுதி எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய பகுதிக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் படையினர், 2 இந்திய வீரர்களை சுட்டுக் கொன்றனர். அவர்களின் தலையையும் துண்டித்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு பிறகு எல்லையில் பதற்றம் நிலவி வருவதால் இரு நாட்டு படைகள் குவிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய ராணுவ முகாம்கள் மீது நடத்தும் துப்பாக்கி சூட்டுக்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு கிருஷ்ண காடி எல்லையில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து சிலர் ஊடுருவ முயல்வதை இந்திய ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். அவர்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது திடீரென பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்திய வீரர்களும் திருப்பி சுட்டு பதிலடி கொடுத்தனர். அரை மணி நேரம் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. அதன்பிறகு ஊடுருவல்காரர்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் ஓடி விட்டனர். ஊடுருவல்காரர்கள் பாகிஸ்தான் படையினரா, தீவிரவாதிகளா என்பது தெரியவில்லை. துப்பாக்கி சண்டையில் வீரர்கள் யாரும் காயமடைந்தார்களா என்பது குறித்த தகவலும் உடனடியாக தெரியவில்லை. தீவிரவாதிகளை ஊடுருவ செய்வதற்காக பாகிஸ்தான் படையினர் இந்திய படைகள் மீது துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

No comments:

Post a Comment