Friday, January 11, 2013

இந்தியா-பாக்., பதட்டத்தை தணிக்க அமெரிக்கா ஆர்வம்!

Friday, January 11, 2013
வாஷிங்டன்::இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும், தற்போதைய பதட்டத்தை தணிக்க உதவும் படி, அமெரிக்கா, தனது தூதர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. காஷ்மீரின், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள, எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதியில், இரண்டு நாட்களுக்கு முன், இந்திய ராணுவ வீரர்கள், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த,போது, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர். இந்திய எல்லைக்குள், 100 மீட்டர் தூரம் வரை, பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுருவி, இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், இரண்டு இந்திய வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். இதில், ஒருவரின் தலையை, பாகிஸ்தான் ராணுவத்தினர் துண்டித்தனர். இந்த தாக்குதலில், மேலும் இரண்டு இந்திய வீரர்கள் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தான் ராணுவத்தின், இந்த நடவடிக்கையால், இருநாட்டு உறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி, விக்டோரியா நுலாண்ட் கூறியதாவது: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவில் சமீப காலமாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. சிக்கலான விஷயத்தை கூட, பேசி தீர்த்து கொள்ளும் முயற்சி நடந்தது. இந்திய வீரர்கள், இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தால், தற்போது, இருநாட்டுக்கிடையே பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. "இந்த பதட்டத்தை தணிக்க, இரு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்கள், உதவ வேண்டும்' என, வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கேட்டுள்ளார். இருநாடுகளும், பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலம், இந்த பதட்டத்தை குறைக்க முடியும், என அமெரிக்கா நம்புகிறது. இதற்கு உதவி செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு விக்டோரியா கூறினார்.

அமெரிக்க ராணுவ அமைச்சர் லியோன் பெனிட்டா இது குறித்து குறிப்பிடுகையில், ""இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட செயல், கோபத்தை தூண்டக்கூடியதாக உள்ளது. இந்த பகுதியில் அமைதி நிலவ வேண்டும், என விரும்புகிறோம். இந்த விஷயத்தில் பயங்கரவாத பின்னணி இருந்தால், அதை ஒடுக்க நாங்கள் முன் நிற்போம்,'' என்றார்.

No comments:

Post a Comment