Sunday, January 13, 2013
ஜம்மு:இந்தியா - பாக்., எல்லையில், இரு நாட்டு ராணுவமும், படைகளை குவித்து வருவதால், அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. ""போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை, பாகிஸ்தான் ராணுவம், தொடர்ந்து மீறினால், வேறு வாய்ப்புகளை, இந்திய ராணுவம் பரிசீலிக்க வேண்டியிருக்கும்,'' என, இந்திய விமானப் படை தளபதி, பிரவுன், எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில், இம்மாதம், 8ம் தேதி, இந்திய எல்லைக்குள், பாக்., ராணுவத்தினர் அத்துமீறி பிரவேசித்தனர். கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், உயிரிழந்த இரண்டு ராணுவ வீரர்களின் தலைகளையும் துண்டித்தனர்.பாக்., ராணுவத்தின் இந்த கொடூர நடவடிக்கைக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. இதன் பின்னும், பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய வீரர்கள் மீது, தொடர்ந்து பீரங்கிகளாலும், ராக்கெட்டுகளாலும், தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்திய வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில், பாக்., ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, எல்லை பகுதியில், அசாதரணமான சூழல் நிலவுகிறது.
எல்லையில் ராணுவம் குவிப்பு:
பாக்., ராணுவம், தன் வீரர்களுக்கான விடுமுறையை ரத்து செய்துள்ளது. இதற்கிடையே, எல்லை பகுதியில், இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன. பூஞ்ச், ரஜவ்ரி ஆகிய பகுதிகளில், இந்திய வீரர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளதாகவும், செய்திகள் வெளியாகின்றன.பாகிஸ்தான் ராணுவத்தின் தகவல் பரிமாற்றங்களை இடைமறித்து கேட்டபோது, எல்லை பகுதியில், பாக்., படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள தகவல் உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாக, இந்திய உளவு அமைப்புகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கிடையே, பிரதமர் அலுவலகம், ராணுவ அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகள், எல்லை பகுதியில் நிலவும் பிரச்னை கூர்ந்து, கவனித்து வருகின்றனர். எல்லை பகுதியில், இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளதால், அங்கு வசிக்கும் மக்களிடையே, பீதி ஏற்பட்டுள்ளது.
"போர் தர்மத்தை பின்பற்ற வேண்டும்' :
இந்திய விமானப் படை தளபதி, பிரவுன் கூறியதாவது: எல்லை பகுதியில், இரு நாடுகளுக்கு இடையேயான பகுதியில், கட்டுப்பாட்டு கோடு உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளும் அமலில் உள்ளன. இந்த விதிமுறைகளுக்கு, இரு நாடுகளும், பரஸ்பரம் மதிப்பளிக்க வேண்டும்.ஆனால், எல்லையில், சமீபகாலமாக பாகிஸ்தான் ராணுவத்தினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், ஏற்க தக்கதாக இல்லை. எல்லையில் என்ன நடக்கிறது என்பதை, நம் ராணுவம், கூர்ந்து கவனித்து வருகிறது.போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை பாகிஸ்தான் தொடர்ந்து மீறும் பட்சத்தில், இந்திய ராணுவம், வேறு சில வாய்ப்புகள் குறித்து, பரிசீலிக்க வேண்டியிருக்கும். அந்த வேறு சில வாய்ப்புகள் என்ன என்பதை, தற்போது கூற முடியாது.ராணுவத்தில் ஒருவர் சேர்ந்தால், அதில் உள்ள விதிமுறைகøளயும், கட்டுப்பாட்டையும், போர் தர்மத்தையும் பின்பற்ற வேண்டும். ஆனால், இந்திய வீரர்கள் மீது, கொடூர தாக்குதல் நடத்தியதன் மூலம், பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்த விதிமுறைகளை பின்பற்றத் தவறி விட்டனர் என, தெரிகிறது.இவ்வாறு பிரவுன் கூறினார்.
எல்லை வர்த்தகம் தொடர்கிறது :
இந்தியா - பாக்., எல்லை யில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சில பகுதிகளிலிருந்து, இந்தியாவுக்குள் உள்ள பகுதிகளுக்கு, சாலை வழி வர்த்தகத்துக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. தற்போது, எல்லை பகுதியில் பதற்றம் நிலவினாலும், ஸ்ரீநகர்-முஜாப்பரபாத் பகுதிகளுக்கு இடையே, வர்த்தகம் தொடர்ந்து நடக்கிறது. இந்த வாரத்தில் மட்டும், இரு நாடுகளுக்கு இடையே, இந்த பகுதியில், 19 கோடி ரூபாய் அளவுக்கு, வர்த்தகம் நடந்துள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.

No comments:
Post a Comment