Tuesday, January 15, 2013

பாம்பன் கடலில் தவிக்கும் கப்பலை மீட்க தூத்துக்குடியில் இருந்து 2 கப்பல்கள் வருகிறது!

Tuesday, January 15, 2013
ராமேசுவரம்::சேதம் அடைந்த ரெயில் பாலத்தின் 121-வது தூணை சீரமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. கொல்கத்தாவில் இருந்து மும்பை நோக்கி கடல் வழியாக சென்ற பார்ஜார் கப்பல் மற்றும் அதனை இழுத்து வந்த “ஆதிநாத்” என்ற இழுவை கப்பல் பலத்த காற்று வீசியதால் பாம்பன் கடல் பகுதியில் கடந்த 10-ந்தேதி நிறுத்தப்பட்டிருந்தன. 

அப்போது 2 கப்பல்களின் நங்கூரம் அறுந்தது. இதில் மிதவை கப்பல் அருகில் இருந்த பாம்பன் ரெயில் பாலத்தின் 121-வது தூணில் மோதியது. 

இதனால் பாலம் சேதமடைந்ததால் ராமேசுவரத்திற்கு ரெயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதி மீனவர்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்களின் கடும் முயற்சியினால் ரெயில் பாலத்தின் மீது மோதி இருந்த மிதவை கப்பல் மீட்கப்பட்டு நடுக்கடலுக்கு கொண்டு வரப்பட்டது. 

அந்த மிதவை கப்பல் ராமேசுவரம் கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் “ஆதிநாத்” இழுவை கப்பல் பாம்பன் ரெயில் பாலத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள பாறையில் ஏறியது. 

அதனை மீனவர்கள் நடுக் கடலுக்கு கொண்டு செல்ல எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. இதுகுறித்து பாம்பன் துறைமுகத்துக்கு வந்திருந்த கடலூர் துறைமுக அதிகாரி அன்பரசு கூறுகையில், பாறையில் ஏறியுள்ள இழுவை கப்பல் அதிக எடை உள்ளதால் அதை மீட்க முடியவில்லை. 

இதனை மீட்க தூத்துக்குடியில் இருந்து அதிக குதிரை திறன் கொண்ட இன்ஜின் பொருந்திய 2 கப்பல்கள் நாளைக்குள் கொண்டு வரப்படுகிறது என்றார். 

இந்நிலையில் மிதவை கப்பல் மோதி சேதம் அடைந்த ரெயில் பாலத்தின் 121-வது தூணை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பாலத்தில் ஏற்பட்ட பழுதை கண்டறிய இந்திய ரெயில்வே பொறியாளர் (பாலங்கள்) லாலுசிங், மதுரை மண்டல பொறியாளர் (ஒருங்கிணைப் பாளர்) ராம்பிரசாத், பன்னீர்செல்வம் ஆகியோர் மேற்பார்வையில் 20 என் ஜினீயர்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் சேதம் அடைந்த தூணை வலுப்படுத்தும் வகையில் அதனை சுற்றி 100 கிலோ எடை கொண்ட இரும்பு கிரில்களை தண்டவாள இரும்பு கர்டருடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது. 

அதன் பிறகு இரும்பு கிரில்களை சேர்த்து கெமிக்கல் கலந்த சிமெண்ட் கான்கிரீட் தூண் அமைக்கப்படுகிறது. கடல் சீற்றம் இல்லாமல் இருந்தால் குறிப்பிட்ட 7 நாட்களில் இப்பணிகள் முடியும். இல்லாவிடில் மேலும் சில நாட்கள் ஆகலாம் என தெரிகிறது. 

மேலும் இன்று சேதம் அடைந்த தூணில் எங்கு விரிசல் ஏற்பட்டுள்ளது என்பதை அறிய கடலுக்குள் வேவ்ஸ் கருவியை செலுத்தி சிறப்பு நிபுணர்கள் கண்டறிய உள்ளனர்.
1-11-12_findyour_INNER_468x60.gif

No comments:

Post a Comment