Tuesday, January 15, 2013

மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டில் வீரர்களை துவம்சம் செய்த காளைகள்: 100 பேர் படுகாயம்!

Tuesday, January 15, 2013
பாலமேடு::மதுரை அவனியாபுரம், பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் 100 வீரர்கள் படுகாயமடைந்தனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேட்டில் கடந்த 25 ஆண்டுகளாக மஞ்சமலை மகாலிங்கசுவாமி விழாவாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. பாலமேடு கிராம பொது மகாலிங்கசுவாமி மடத்துக்கமிட்டி சார்பில் இன்று காலை 8.30 மணிக்கு மஞ்சமலை ஆற்றுத்திடலில் ஜல்லிக்கட்டு துவங்கியது. விலங்குகள் நல வாரியம், உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்படி கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, எஸ்பி பாலிகிருஷ்ணன் மற்றும் விலங்குகள் நலவாரிய அதிகாரிகள் முன்னிலையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு காலை 6 மணி முதல் மருத்துவ பரிசோதனை துவங்கியது.  மாடுபிடிக்க 620 வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இதில் மருத்துவ பரிசோதனையில் 360 பேர் பங்கேற்றேற்றனர். பரிசோதனைக்கு பின்பு 321 வீரர்கள் மட்டும் மாடு பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நம்பர் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறத்தில் பனியன், புளூ நிறத்தில் டிரவுசர் அணிந்து ஜல்லிக்கட்டு மைதானத்தில் இறங்கினர். காளைகளுக்கு அடையாள எண்கள் மஞ்சள் பெயின்ட் மூலம் கொம்புகளில் எழுதப்பட்டன. கால்நடை துறையை சேர்ந்த 30க்கும் அதிகமான டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்து ஜல்லிக்கட்டு காளைகளை வாடிவாசல் பகுதிக்கு அனுப்பி வைத்தனர். கலெக்டர் அன்சுல் மிஸ்ரா சரியாக காலை 8.45 மணிக்கு கொடியசைத்து ஜல்லிக்கட்டை துவக்கி வைத்தார். மஞ்சமலை கோயில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டில் 400 காளைகள் பங்கேற்றன. பெரும்பாலான காளைகள் நின்று விளையாடி அடக்க வந்த வீரர்களை தூக்கி வீசி துவம்சம் செய்தன. தொடர்ந்து மதியம் 2 மணி வரை காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.  20 டிஎஸ்பிக்கள் உள்பட ஆயிரத்து 300 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டில் மதியம் வரை 29 மாடுபிடி வீரர்கள் படுகாயமடைந்தனர்.

அவனியாபுரம்: மதுரை, அவனியாபுரத்தில் பொங்கல் திருநாளான நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இந்தப் போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 467 காளைகள், கால்நடை மருத்துவத்துறை மூலம் முறையாக பதிவு செய்யப்பட்டு, சென்னை பிராணிகள் நலவாரிய சான்றிதழ் பெற்று கலந்து கொண்டன. தகுதி அடிப்படையில் இவற்றில் 27 காளைகள் நிராகரிக்கப்பட்டன. காலை 8.30 மணிக்குத் துவங்கி, வாடிவாசல் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் சீறிப்பாய்ந்தன. அனுமதிக்கப்பட்ட 440 காளைகளில் நேரமின்மை காரணமாக 314 காளைகள் மட்டுமே பங்கேற்க முடிந்தது. பிற்பகல் 2.45 மணிக்கு போட்டி நிறைவடைந்தது. 18 முதல் 40 வயது வரையுள்ள 294 பேர் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்க நாணயம், சைக்கிள், வெள்ளி நாணயம், மின்விசிறி, மிக்சி, பானை, வேஷ்டி, சட்டை, துண்டு பரிசாக வழங்கப்பட்டன. காளைகளை அடக்கும் முயற்சியில் 60 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

நாளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடக்கிறது. இதுவரை 600 மாடு பிடிவீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதே போன்று 450 ஜல்லிக்கட்டு காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.¢ காலை 8 முதல் மதியம் 2 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இவர்களுக்கு தனி காலரி அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சிறப்பு பஸ் வசதி, மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment