Thursday, December 6, 2012

தமிழர்களுக்கு வாய்த்த ஊடகங்கள்!

Thursday, December 06, 2012
இலங்கை::அந்தக்கால சுதந்திரனின் இடத்தைப் பிடித்துவிட யாழ்ப்பாணப் பத்திரிகை ஒன்று முனைந்து வருவது துலாம்பரமாகத் தெரிகிறது. வரலாற்றில் எதுவும் இரண்டாவது முறையாக அரங்கேறும் போது அது கேலிக்குரியதாகி விடுவதாக மார்க்ஸ் சொல்லியிருப்பதைத்தான் நினைத்துக்கொள்ளத் தோன்றுகிறது.

Add caption


நேற்றைய அந்தப் பத்திரிகையின் முன்பக்கத்தில் ஒரே ஒரு செய்தியைத் தவிர மற்றதனைத்துமே தமிழ்மக்கள் ஏதோ ஐந்தாவது போர்முனைக்குப் புறப்பட்டுவிட்டார்கள் என்று ஆவேச அறைகூவல் விடும் செய்திகளாகவே கொட்டித்தாளிக்கப்பட்டிருக்கின்றன. மாபெரும் ஆர்ப்பாட்டம், நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள், மக்கள் அமைப்புகள் கட்சிகள் குவிகின்றன, ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டத்தில், பணிகள் இடைநிறுத்தம், கல்வி நடவடிக்கைகள் சாத்தியமில்லை என ஆசிரியர் சங்கம் அறிவிப்பு, மாணவர்கள் தொடர்ந்தும் தடுப்பு, பல்கலைக்கழகம் வெறிச் சோடியது, சிங்கள மாணவர்கள் வெளியேற்றம் என்று நாடு பழையபடி குழம்பிவிட்டது என்பதை மிகுந்த கொண்டாட்டத்தோடு அறிவிக்கிறது அந்தப் பத்திரிகை.தமிழ் மக்களுக்கு வாய்த்த ஊடகங்களின் பொறுப்புணர்வை நினைத்தால் புல்லரிக்கிறது. பதற்றமும், கலவரமும், தாக்குதலும், அழிவும், சிதைவும், போரும் என்றால் எவ்வளவு கொண்டாட்டத்தை வெளிப்படுத்துகின்றன இந்தப் பத்திரிகைகள்! தாக்கப்பட்ட தமிழ் மாணவர்களுக்காக நாட்டின் ஏனைய பல்கலைக் கழகங்களிலுள்ள சிங்கள மாணவர்கள் அரசைக் கண்டித்து வீதிக்கு இறங்கியிருக்கிறார்கள். இனரீதியாகப் பிரித்துப்பார்க்காமல் மாணவர்கள் தாக்கப்பட்டதற்குக் கண்டனத்தைத் தெரிவிக்கிறார்கள்.

அதையெல்லாம் இருட்டடிப்புச் செய்துவிட்டு யாழ் பல்கலைக் கழகத்திலிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேற்றம் என்று வெறியோடு எழுதுகிறது தமிழ் இனவாதத்தில் குளிர்காயும் யாழ்ப்பாணப் பத்திரிகை.

யாழ் பல்கலைக்கழகத்தில் இப்போதைக்கு கல்வி நடவடிக்கைகள் கிடையாது என்று குரூரக் கொண்டாட்டத்தோடு எழுதுகிறது. பாதிக்கப்படப் போவது நமது தமிழ் மாணவர்களல்லவா! அதுபற்றிய எந்தக் கரிசனையோ கவலையோ கிடையாத, தங்கள் அரசியல் லாபவெறிக்கு மாணவர்களின் எதிர்காலத்தைப் பலியாக்கும் வெறிமுற்றிப் போயிருக்கும் தமிழ் ஊடக உலகைப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. அருவருப்பாகவும் இருக்கிறது.

யாழ்ப்பாணம் அதிர்கிறது, மக்கள் போராட எழுந்துவிட்டனர் என்றெல்லாம் இவர்கள் பில்ம் காட்டி எழுதுவது வெளியுலகத் தமிழர்களையும் வெளியூர்த் தமிழர்களையும் ஏமாற்றத்தான். யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கு இவர்களது சுத்துமாத்தை வாசிக்கச் சிரிப்புத்தான் வரும். நேற்றுக் காலை பத்திரிகையில் யாழ்ப்பாணத்தில் மக்கள் குவிகின்றனர்,மாபெரும் ஆர்ப்பாட்டம், என்று செய்தியைப் பார்த்துவிட்டு பகல் யாழ்ப்பாணம் பஸ் நிலையம் வந்து பார்த்தவர்கள் திகைத்துத்தான் போயிருப்பார்கள்.

குவிந்த மக்கள் எல்லாம் எங்கே போய் ஒளித்துவிட்டனர்? என்றோ அல்லது பெரிய ஆர்ப்பாட்டத்தை வேறெங்காவது மாற்றி வைத்துவிட்டார்களோ? என்று தடுமாறித்தான் இருப்பார்கள்.

வழக்கம் போல இவர்களது மாபெரும் ஆர்ப்பாட்டங்களுக்கு வருபவர்களான, தமிழரசுக்கட்சி சார்பாகக் கடந்த தேர்தலில் நின்றவர்களும் அடுத்த தேர்தலில் வேட்பாளராக சீற் பிடிக்க முனைபவர்களுமாக வந்தவர்கள் ஐம்பது அறுபது பேர் வரை இருக்கும். மற்றும் ஒரு ஐம்பது அறுபது பேர் ரவுணுக்கு அலுவலாக வந்தவர்கள். இதுதான் இன்றைய அவர்களது பத்திரிகையில் கொட்டை எழுத்தில் வரப்போகும் யாழ்ப்பாணமே அதிர்ந்த மாபெரும் ஆர்ப்பாட்டம்!.

தேர்தல்களுக்காக இவர்கள் செய்யும் இந்த ஸ்ரண்ட்களில் மக்களுக்கு அக்கறை இல்லை என்பதும், இயல்பு வாழ்வைக் குழப்பி வீணான ரோசத்தில் மீண்டும் மீண்டும் அழிந்துபட மக்கள் தயாரில்லை என்று அவர்கள் தெளிந்திருக்கிறார்கள் என் பதும்தான் மிகப்பெரிய ஆறுதல்.

No comments:

Post a Comment