Monday, December 3, 2012

தமிழ் மக்களைப் பணயம் வைத்து ஒரு(புலி கூட்டமைப்பின்)அரசியல் சூதாட்டம்!

Monday, December 03, 2012
இலங்கை::அண்மையில் பத்திரிகைகளில் வெளியாகிய இரண்டு செய்திகள் என் கவனத்தை ஈர்த்தன. இலங்கை அரசாங்கமோ உலக நாடுகளோ இனப்பிரச்சினைக்கான தீர்வை ஜனவரி முதலாம் திகதிக்கிடையில் முன்வைக்காவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கப்போவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறிய செய்தி ஒன்று. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை தமிழ் மக்கள் கூட்டமைப்பையே ஆதரிப்பார்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கூறிய செய்தி மற்றது. இரண்டு செய்திகளையும் மேலோட்டமாகப் பார்த்தால் அவை ஒரே தகவலையே தருகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்றை ஒருபோதும் முன்வைக்காது என்பதே அத்தகவல்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் வரை தமிழ் மக்கள் கூட்டமைப்பையே ஆதரிப்பார்கள் என்ற அரியநேத்திரனுடைய கூற்றின் மறுபக்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டால் தமிழ் மக்கள் கூட்டமைப்பை ஆதரிக்கமாட்டார்கள் என்பதாகும். இப்படியான அச்சம் கூட்டமைப்புத் தலைவர்களுக்கு இருக்கின்றது என்றும் அதனாலேயே இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தள்ளிப்போடும் தந்திரோபாயத்தைப் பின்பற்றுகின்றார்கள் என்றும் இக்கட்டுரையாளர் பல தடவைகள் கூறியதை அரியநேந்திரன் இப்போது மெய்ப்பிக்கின்றார். இனப்பிரச்சினை இருக்கும் வரை தமிழ் மக்கள் கூட்டமைப்பை ஆதரிப்பார்கள் என்பதே அவரது கூற்றின் உண்மையான அர்த்தம். அதாவது கூட்டமைப்பு அரசியலில் தொடர்வதற்கு இனப்பிரச்சினை தீராமலிருக்க வேண்டும். செல்வம் அடைக்கலநாதனின் உண்ணாவிரத அறிவிப்பு தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான ஸ்ரன்ட் விளையாட்டா அல்லது அவரது அரசியல் அறிவின்மையின் வெளிப்பாடா என்பது விளங்கவில்லை. முதலில் அந்த அறிவிப்பிலுள்ள ஒரு முரண்பாட்டைப் பார்ப்போம். கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தின்போது கூட்டமைப்புத் தலைவர்கள் எல்லோரும் சர்வதேச சமூகம் தீர்வுடன் தயாராக இருக்கின்றது என்றே கூறினார்கள். இப்போது அடைக்கலநாதன் சொல்கிறார் இலங்கை அரசாங்கம் அல்லது உலக நாடுகள் ஜனவரி மாதத்துக்கிடையில் தீர்வொன்றை முன்வைக்காவிட்டால் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போகின்றாராம். சர்வதேச சமூகத்திடம் தீர்வொன்று இருந்திருந்தால் இப்போது உலக நாடுகளுக்குக் காலக்கெடு விதிக்க வேண்டிய அவசியமில்லை. கிழக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில் கூட்டமைப்புத் தலைவர்கள் வாக்குகளுக்காக மக்களுக்குப் பொய் கூறியிருக்கின்றார்கள் என்பதே இதிலிருந்து வெளிப்படும் உண்மை.

உலகம் முழுவதிலும் எத்தனையோ உண்ணாவிரதங்கள் இடம்பெற்றிருக்கின்றன. உண்ணாவிரதத்தின் மூலம் கோரிக்கையை வென்றெடுத்த சந்தர்ப்பங்களும் உண்டு. உண்ணாவிரதம் தோல்வியில் முடிந்த சந்தர்ப்பங்களும் உண்டு. ஏதாவதொரு கோரிக்கையை முன்வைத்தே உண்ணாவிரதம் மேற்கொள்வது வழக்கம். அடைக்கலநாதன் மேற்கொள்ளப்போகும் உண்ணாவிரதம் விசித்திரமானது. இனப்பிரச்சினையின் தீர்வுக்கான திட்டமொன்றை முன்வைத்து அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் உண்ணாவிரதம் மேற்கொள்ளவில்லை. அரசாங்கம் அல்லது உலக நாடுகள் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் என்பதே இவரது கோரிக்கை. பதின்மூன்றாவது திருத்தம்தான் நாங்கள் முன்வைக்கும் தீர்வு என்று அரசாங்கம் கூறுவதாக வைத்துக்கொள்வோம். அப்போது உண்ணாவிரதத்தைக் கைவிடுவாரா? அல்லது பதின்மூன்றாவது திருத்தத்தைத் தீர்வாக ஏற்க முடியாது என்று சொல்வாரா? அப்படியானால் நீங்கள் ஏற்கக்கூடிய தீர்வு எது என்ற கேள்விக்குப் பதில் கூறத்தானே வேண்டும். அந்தப் பதில் தான் கூட்டமைப்பின் தீர்வுத் திட்டம். எப்படிச் சுற்றிச் சுழன்றாலும் இந்த இடத்துக்குக் கூட்டமைப்பு வந்துதான் ஆகவேண்டும்.

மங்கள முனசிங்கவின் அறிக்கை, திஸ்ஸ விதாரணவின் அறிக்கை, சந்திரிகாவின் தீர்வுத் திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் அரசாங்கம் தீர்வை முன்வைக்க வேண்டும் என்று கூட்டமைப்புத் தலைவர்கள் கூறுவது கோமாளிப் பேச்சு. இந்த அறிக்கைகளும் தீர்வுத் திட்டமும் தமிழ் மக்களின் அபிலாiஷகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி இதே தலைவர்கள் அவற்றை நிராகரித்தார்கள். தமிழ் மக்களின் மனோ நிலையையே தாங்கள் பிரதிபலிப்பதாக அவற்றை நிராகரித்த சந்தர்ப்பங்களில் இத்தலைவர்கள் கூறினார்கள். அதாவது, தமிழ் மக்களே அவற்றை நிராகரித்தார்கள் என்பது தான் இவர்களுடைய கூற்றின் அர்த்தம். அப்படியானால், தமிழ் மக்கள் நிராகரித்த அறிக்கைகளையும் தீர்வுத் திட்டத்தையும் அம்மக்கள் மீது திணிப்பதற்குக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றதே.

மேலே குறிப்பிட்ட அறிக்கைகளிலும், தீர்வுத் திட்டத்திலும் உள்ள நல்ல அம்சங்களைத் தொகுத்து ஒரு தீர்வை முன்வைக்கலாம் என்று கூட்டமைப்புத் தலைவர்கள் ஒருவேளை கூறலாம். அந்த நல்ல அம்சங்களைத் தொகுத்து ஏன் இவர்கள் ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கக் கூடாது? மேற்படி அறிக்கைகளையும் தீர்வுத் திட்டத்தையும் நிராகரித்தவர்கள் இவர்களே. எனவே, நல்ல அம்சங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியவர்களும் இவர்கள் தானே. மேலும் சிங்கள அரசாங்கம் தமிழ் மக்களை ஒடுக்குகின்றது என்று எப்போதும் பிரசாரம் செய்கின்றார்கள். அதே சிங்கள அரசாங்கம் நல்ல தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது? கூட்டமைப்பு ஒரு தீர்வுத் திட்டத்தைத் தயாரித்து அறிவித்துவிட்டு, அரசாங்கம் அதை நிராகரிப்பதானால் மாற்றுத் திட்டத்தை முன்வைக்கட்டும் என்று கூறுவதில் நியாயம் உண்டு. அதைவிட்டு, அரசாங்கமே தீர்வை முன்வைக்க வேண்டும் எனக் கூறுவது ஊரை ஏமாற்றும் செயல்.

கூட்டமைப்பு ஏன் ஒரு தீர்வுத்திட்டத்தைத் தயாரித்து முன்வைக்க முடியாது என்ற கேள்வியை நீண்ட காலமாகப் பலர் கேட்கின்றார்கள். இப்படியொரு கேள்வி தங்களை நோக்கி இருப்பதாகக் காட்டிக்கொள்ளாமலே இத்தலைவர்கள் மௌனம் சாதிக்கின்றார்கள். இவர்கள் உண்மையானவர்களொன்றால் தீர்வுத் திட்டத்தை ஏன் தயாரிக்க முடியாது அல்லது ஏன் தயாரிக்க விரும்பவில்லை என்பதற்கான காரணத்தைக் கூறலாமே. அரசாங்கம் தீர்வை முன்வைக்க வேண்டும் என்று சொல்வதற்காகத் தமிழ் மக்களுக்கு ஒரு தலைமை தேவையில்லை. அதை மக்களே சொல்லலாம். தீர்வுத் திட்டமொன்றைத் தயாரித்து அதை வென்றெடுப்பதற்கான முயற்சியை முன்னெடுப்பதற்காகவே தலைமை தேவை.
நாடாளுமன்றத் தெரிவுக் குழுவைப் பகிஷ;கரிப்பதற்குக் கூட்டமைப்புத் தலைவர்கள் என்னென்ன காரணங்களைக் கூறினாலும் உண்மையான காரணம் இவர்களிடம் தீர்வுக்கான ஆலோசனை எதுவும் இல்லை என்பதே. தெரிவுக் குழுவில் பங்குபற்றினால் தீர்வுக்கான ஆலோசனையை முன்வைக்க வேண்டும். எந்த ஆலோசனையும் இல்லாமல் எதை முன்வைப்பது?

தீர்வுத்திட்டமொன்றைத் தயாரித்து வெளியிடுவதற்குக் கூட்டமைப்புத் தலைவர்கள் ஏன் தயங்குகின்றார்கள் என்ற கேள்வி இன்று தமிழ் அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. உட்கட்சி முரண்பாடு காரணமாக இவர்களால் ஒரு தீர்வுத் திட்டத்தைத் தயாரிக்க இயலவில்லை என்று சில அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றபோதிலும் அரசியல் தீர்வை இவர்கள் விரும்பவில்லை என்பதே உண்மையான காரணம் என்று நினைக்கத் தோன்றுகின்றது. இனப்பிரச்சினை இல்லையென்றால் கூட்டமைப்புக்கு அரசியல் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறலாம். அதனால் இனப்பிரச்சினை எப்போதும் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றார்கள். அரசாங்கம் தீர்வை முன்வைக்க வேண்டும் என்று கூறுவது அதற்காகவே. இன்றைய அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை ஒருபோதும் முன்வைக்காது என்பது கூட்டமைப்புத் தலைவர்களின் நம்பிக்கை. அரசாங்கம் ஏதாவதொரு தீர்வை முன்வைத்தால் அது தமிழ் மக்களின் அபிலாiஷயைப் பூர்த்தி செய்யவில்லை என்று கூறி நிராகரிக்கலாம். இப்படியே எல்லாத் தீர்வுகளையும் நிராகரித்துக்கொண்டே காலத்தைக் கடத்தலாம் என்று நினைக்கின்றார்கள்.

தமிழ் மக்களின் இன்றைய தேவை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு. அந்தத் தீர்வைப் பெற்றுத் தருவதற்காகத் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைமை நடைமுறைச் சாத்தியமான தீர்வுத் திட்டமொன்றைத் தயாரித்து அதை முன்னெடுப்பதற்கான செயற்பாட்டில் ஈடுபடவேண்டும். அதைவிட்டு, அரசாங்கம் தீர்வை முன்வைக்க வேண்டும், சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத்தரும் என்றும் நடக்க முடியாதவற்றைக் கூறிக் காலங் கடத்துவது தமிழ் மக்களின் தலையில் புளி அரைப்பதாகிவிடும்.

- சங்கர சிவன் -

No comments:

Post a Comment