Tuesday, December 11, 2012
வேலூர்::ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, முருகன் சந்திப்பு நிறுத்தம் குறித்து, புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கனடாவில் உள்ள நபருடன், முருகன் மொபைலில் பேசியதாக வந்த புகார், தற்போது அதிக பரபரப்பை ஏற்படுத்துகிறது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற அவரது மனைவி நளினி, வேலூர் பெண்கள் சிறையில் உள்ளார். தம்பதியர் இருவரும், 15 நாட்களுக்கு, ஒருமுறை சந்தித்துப் பேசிக் கொள்ள சிறைத்துறையினர் அனுமதி அளித்தனர். பல ஆண்டுகளாக, இவர்கள் சந்திப்பு நடந்து வந்தது. கடந்த மாதம், சிறைத்துறை விஜிலன்ஸ் போலீசார், வேலூர் ஆண்கள் சிறையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, முருகனிடமிருந்து மொபைல் போன் ஒன்று, சிம்கார்டு, இரண்டு "சிடி'க்களை கைப்பற்றினர். இதை ஆய்வு செய்த போது, திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
முருகனிடமிருந்து கைப்பற்றிய, சிம் கார்டில் இருந்து, இலங்கை, கனடாவுக்கு, ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு, அடிக்கடி பேசியது தெரிந்தது. மேலும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும், சென்னை பிரமுகர் ஒருவரிடம், அடிக்கடி பேசியதும் தெரிந்தது. அதோடு கைப்பற்றிய, "சிடி'க்களை ஆய்வு செய்ததில், இலங்கை உட்பட முக்கிய வரைபடங்கள் இருந்தது தெரிந்தது. இது பற்றி மத்திய அரசு உளவுத்துறையினர், ரகசியமாக விசாரணை செய்து வருகின்றனர். முருகனிடம் மொபைல் போன் கைப்பற்றிய விவகாரம், டில்லியில் உள்ள "ரா' உளவுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இது சர்வதேச பிரச்னை என்பதால், "முருகனை ரகசியமாக கண்காணிக்கும்படியும், முருகன், நளினி சந்திப்புக்கு அனுமதிக்க வேண்டாம்' என்றும் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், தம்பதியர் சந்திப்பு கடந்த, இரண்டு முறை நடக்கவில்லை, என சிறைத்துறையினர் கூறுகின்றனர். அவர்கள் சந்திப்புககு வாய்ப்பின்றி, அவர்களை வேறு சிறைக்கு மாற்ற ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் சிறைத்துறையினர் கூறினர்.


No comments:
Post a Comment