Monday, December 3, 2012

முதல்வரை அவதூறாக பேசிய வழக்கு : நாமக்கல் கோர்ட்டில் விஜயகாந்த் ஆஜர்!

Monday, December 03, 2012
நாமக்கல்::தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் இன்று நாமக்கல் நீதிமன்றத்தில் காலை 10.28 மணிக்கு ஆஜரானார். நாமக்கல் குளக்கரை திடலில் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் பங்கேற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாக பேசியதாக, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அரசு வக்கீல் கடந்த மாதம் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி வேலு, இந்த வழக்கு தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிசம்பர் 3ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை 10.28 மணிக்கு விஜயகாந்த் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி வேலு முன்னிலையில் ஆஜரானார். விசாரணையின்போது, விஜயகாந்திடம் இந்த வழக்கு தொடர்பாக ஏதேனும் கூற விரும்புகிறீர்களா? என்று நீதிபதி கேட்டார். ஆனால், அவர் தான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றார்.

மேலும், கோர்ட்டில் நடக்கும் விவாதங்களை எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். சினிமா வேறு. இது வேறு என்றார். இதனால் கோர்ட்டில் சிரிப்பொலி எழுந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பிப்ரவரி மாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர், விஜயகாந்த் காரில் புறப்பட்டு சென்றார். விஜயகாந்த் வந்ததையடுத்து, ஏராளமான கட்சி நிர்வாகிகள் கோர்ட் வளாகத்தில் திரண்டிருந்தனர்.  இதையொட்டி கோர்ட் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment