Wednesday, December 05, 2012
சென்னை::பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 18 ஆயிரம் போலீசார் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சென்ட்ரல், எழும்பூர் உள்பட அனைத்து ரயில் நிலையங்களிலும் 110 ரகசிய கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் 6ம் தேதி, பாபர் மசூதி இடிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தீவிரவாத தாக்குதல் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை அதிகரிப்பது வழக்கம்.
தமிழகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில், பஸ் நிலையங்கள், ஷாப்பிங் காம்ளக்ஸ்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்படும். நாளை பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பஸ், ரயில் மற்றும் விமான நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரை மீனாட்சி, பழநி முருகன் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி ராமானுஜம், மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். சென்னையிலும் கமிஷனர் ஜார்ஜ் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதையடுத்து, சென்னையில் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நேற்றிரவு முதல் நகரில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஓட்டல்கள், லாட்ஜ்களிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சந்தேகப்படும் நபர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பாதுகாப்பு நாளை மறுநாள் வரை 3 நாட்கள் தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை அதிகரிப்பது குறித்து பாதுகாப்பு படை சென்னை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.காந்தி, ரயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் கயல்விழி ஆகியோர் சென்னையில் நேற்று மாலை ஆலோசனை நடத்தினர். சென்னை சென்ட்ரல், எழும்பூர், மாம்பலம், தாம்பரம், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் மட்டுமின்றி, வழியில் உள்ள ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பை அதிகரிப்பது என்றும், இந்த ஆண்டு பாதுகாப்பு பணியில் கூடுதலாக வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய்களை இடம் பெற செய்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சென்ட்ரல், எழும்பூர் மற்றும் சென்னை முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள 110 ரகசிய கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். ரயில் நிலையங்களில் பயணிகளின் லக்கேஜ்கள் முழுவதுமாக ஸ்கேன் செய்யப்பட்டு, ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. ஸ்டிக்கர் ஒட்டிய லக்கேஜ்களை மட்டுமே ரயில்களில் கொண்டு செல்ல போலீசார் அனுமதிக்கின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், அதற்கேற்ப போலீசாரும் பயணிகளை மரியாதையாக நடத்த வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ரயில்வே பாதுகாப்பு படையினருடன் மாநில போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுதொடர்பாக ரயில்வே போலீஸ் ஐ.ஜி. ஆறுமுகம் தலைமையில் இன்றும் ஆலோசனை நடத்தப்பட்டது. பொதுவாக இதுபோன்ற நாட்களில் பாதுகாப்பு கருதி ரயில்களில் சரக்குகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படும். இந்த ஆண்டு, முக்கிய பார்சல்களை அனுப்ப தடையில்லை என்றும், மற்ற சரக்குகளை அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகத்தை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். அதனால், முக்கிய பார்சல்களை அனுப்ப தடையில்லை.

No comments:
Post a Comment