Wednesday, December 5, 2012

தமிழக மீனவர்கள் 40 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம்!

Wednesday, December 05, 2012
சென்னை::தமிழக மீனவர்கள் 40 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 22 மீனவர்களும், புதுச்சேரியில் காரைக்காலைச் சேர்ந்த 18 மீனவர்கள் 5 மீன்பிடி படகுகளில் கடந்த 2ம் திகதி கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.

இவர்களை இலங்கை கடற்படையினர் புல்மோடை அருகே கைது செய்துள்ளது. இவர்களை 10ம் திகதி வரை சிறைக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இதுபோன்று இந்திய - இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டும், கைது செய்யப்பட்டும் வருகின்றனர். இதனால், இந்திய மீனவர்கள் பாதுகாப்பாற்ற நிலையை உணர்கின்றனர்.

இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள், இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்தால், இந்திய கடலோரக் காவல்படை அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பிவிடுகிறது. இந்த விஷயத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கை அரசு, தமிழக மீனவர்கள் 40 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

எனவே, இலங்கை அதிகாரிகளுடன் பேசி, உடனடியாக இந்த 40 மீனவர்களையும், 5 படகுகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களில் 37 கோடியில் மீன் விதை பண்ணைகள் : ஜெயலலிதா!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ரூ.37 கோடியில் மீன் விதை பண்ணைகள் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உள்நாட்டு மீன் உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கும், தற்போதுள்ள உள்நாட்டு நீர்வளங்களை முழுமையாக பயன்படுத்தி மீன்பிடிப்பை அதிகப்படுத்துவதற்கும், நவீன வசதிகளுடன் கூடிய மீன் விதைப் பண்ணைகளை ஈரோடு மாவட்டம் பவானிசாகர், கரூர் மாவட்டம் திருக்கம்புலியூர், திருச்சியில் அசூர், புதுக்கோட்டையில் தட்டமனைப்பட்டி, தஞ்சையில் அகரப்பேட்டை, நெய்தலூர், தட்டான்குளம், விழுப்புரத்தில் வீடூர் அணை, காஞ்சிபுரம் மாவட்டம் வாணியஞ்சாவடி, நெல்லையில் மணிமுத்தாறு, கடலூரில் லால்பேட்டை ஆகிய 11 இடங்களில் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க முதல்வர் ஜெயலிதா உத்தரவிட்டுள்ளார்.

கடப்பாக்கம், சாமியார்பேட்டை, செருதூர், முத்துக்கூடா, தேவிபட்டினம், ரோச்மாநகர், தருவைக்குளம், திரேஸ்புரம் (விவேகானந்தர் காலனி), இனயம்புத்தன்துறை, சைமன் காலனி, குரும்பணை ஆகிய 11 இடங்களில் சுகாதாரமான முறையில் மீன்களை கையாளுவதற்கு ஏற்றவாறு ஏலக்கூடம், வலை பின்னும் கூடம், மீன் உலர்தளம், உட்புற சாலை வசதி, தெரு விளக்கு வசதி, தண்ணீர் வசதி, கழிவு நீர் வடிகால் வசதி மற்றும் அலுவலகக் கட்டிடம் ஆகிய வசதிகளுடன் கூடிய மீன் இறங்கு தளங்களை ரூ.63 கோடியில் அமைக்கப்படும்.

மீன் வளர்ப்பு, மீன் உற்பத்தி, மீன் உணவின் முக்கியத்துவம், மீனிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகள் ஆகியவைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் மீன் உணவுத் திருவிழாவை இந்த ஆண்டு சென்னை தீவுத் திடலில் நான்கு நாட்கள் நடத்துவதற்கும், இந்த விழாவினை நடத்துவதற்கு 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த திருவிழாவில் தேசிய அளவிலான மீன் வளர்ப்பு சார்ந்த நிறுவனங்கள், மீன் உணவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், மீன் தீவனம் தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனங்கள், வண்ண மீன் உற்பத்தி நிறுவனங்கள் ஆகிய அனைத்து நிறுவனங்களும் கலந்து கொள்ளும்.

No comments:

Post a Comment