Friday, November 2, 2012

அமெரிக்காவில் இறுதி கட்ட தேர்தல் பிரசாரம்!

Friday, November 02, 2012
வாஷிங்டன்::அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி, அந்நாட்டு பத்திரிகைகளில், முழு பக்க, பிரசார விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.அமெரிக்காவில், வரும் 6ம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில், அதிபர் ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில், மாசசூசெட்ஸ் முன்னாள் முதல்வர், மிட்ரோம்னியும் போட்டியிடுகின்றனர். இன்னும் சில உதிரி கட்சிகள் களத்தில் உள்ளன.

வாக்காளர்களை கவர்வதற்காக, பிரதான கட்சி வேட்பாளர்களான ஒபாமாவும், ரோம்னியும் சலுகை திட்டங்களை அறிவித்துள்ளனர்.பொதுமக்கள் முன்னிலையில், இருவருக்கும் இடையே, மூன்று சுற்று விவாதம் முடிந்த நிலையில், ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

கடைசி கட்ட பிரசாரத்தின் போது, அமெரிக்காவில் அடித்த, "சாண்டி' புயல் இடையூறு செய்து விட்டது. இதனால், ஒபாமா, புயல் பாதித்த, நியூஜெர்சியில் நிவாரண பணிகளை பார்வையிட்டு வருகிறார்.இன்னும், ஐந்து நாட்களே உள்ள நிலையில், பத்திரிகை மற்றும் "டிவி'க்களில் இவர்களது பிரசாரம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக இந்தியர்களை கவரும் விதத்தில், பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அமெரிக்காவில், 30 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். வாஷிங்டன், நியூயார்க், நியூஜெர்சி, விர்ஜினியா, கலிபோர்னியா உள்ளிட்ட இடங்களில், இந்தியர்கள் அதிகம் உள்ளனர். இவர்களுக்கு ஓட்டுரிமை உண்டு, என்பதால், இவர்களை கவர்வதற்காக, இந்த பகுதியிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில், முழு பக்க விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியர்கள் புரிந்து கொள்ளும் வகையில், இந்தி எழுத்துக்களில் இந்த விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன."ஒபாமா ஆட்சியில் தான், அதிக அளவில் இந்தியர்கள் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். நான்கு காபினட் செயலர்களை பதவியில் அமர்த்திய ஒபாமா, ஆசிய நாட்டு நீதிபதிகளின் எண்ணிக்கையையும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளார். அவர் ஒரு சிலருக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் தலைவர்' என்ற வாசகங்கள், முழு பக்க விளம்பரத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

கலிபோர்னியாவில், ஒபாமாவுக்கு ஆதரவு குறைவு என்பதால், மிட்ரோம்னி ஆதரவாளர்கள், இந்திய வம்சாவளி வாக்காளர்களை கவரும் விதத்தில் முழு பக்க விளம்பரத்தை கொடுத்துள்ளனர்.அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு முன், தேர்தலுக்காக, 3,850 கோடி ரூபாய் மட்டும் செலவானது. ஆனால், இந்த முறை தேர்தல் செலவு, 33 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

No comments:

Post a Comment