Friday, November 02, 2012
புலிகள் பெயரில் நடக்கும் மோதலால், கனடாவில் நடக்கவிருக்கும், இளையராஜா பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. "திட்டமிட்டபடி, நிகழ்ச்சி நடக்கும்' என, ஒரு பிரிவினரும், நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என, மற்றொரு பிரிவினரும் தெரிவித்து வருகின்றனர். இதனால், நிகழ்ச்சி குறித்து பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
டிரினிடி ஈவன்ட்ஸ்' என்ற அமைப்பு, "எங்கேயும் எப்போதும் ராஜா' என்ற இசை நிகழ்ச்சியை, கனடா நாட்டின், டொரொன்டோ நகரில், நாளை நடத்துகிறது. இளையராஜா தலைமையில், பிரபல தமிழ் பின்னணி பாடகர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
கனடாவில் நடக்கும் இளையராஜாவின் முதல் நிகழ்ச்சி என்பதால், பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளனர். நிகழ்ச்சி நடப்பதற்கு ஒரு வாரம் முன்பே, நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன. இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் நிதியில், ஒரு பகுதியை, இலங்கையின் வடக்குப் பகுதியில், அவசர மருத்துவ சிகிச்சை மையம் அமைக்க அளிப்பதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
கனடாவில் வசிக்கும், புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களே நிகழ்ச்சிக்கான ஆதரவை அளிக்கின்றனர். இந்நிலையில், நவம்பர் மாதம் முழுவதும், புலிகளின், "மாவீரர் தினம்' அனுசரிக்கப் படுவதால், இந்த கால கட்டத்தில், மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என, புலம் பெயர்ந்த புலிகள் ஆதரவு தமிழர்களின் ஒரு பகுதியினர், இளையராஜா நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாவீரர் தினத்தை அனுசரிப்பவர்கள் அனுசரிக்கட்டும்; நிகழ்ச்சிக்கு வருபவர்கள் வரட்டும். வலுக்கட்டாயமாக, ஒருவர் மீது கருத்தை திணிப்பதை ஏற்க முடியாது. தனி நபரின் சுதந்திரத்தை மதித்து நடக்க வேண்டும். தமிழகத்தில் சிலர், தேவையற்ற கருத்துக்களை பரப்புகின்றனர். இதை ஏற்காமல், புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்' என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. "ஒரு பார்வையாளர் இருந்தாலும் நிகழ்ச்சியை நடத்துவேன்' என, இளையராஜா கூறிய வீடியோவை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர்.


No comments:
Post a Comment