Sunday, November 25, 2012
ரமலா::பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத்தின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதால், 8 ஆண்டுகளுக்கு பின் அவரது உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்தார். பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தார். செல்வாக்கு மிகுந்த தலைவராக இருந்த அராபத் கடந்த 2004ம் ஆண்டு பாரிஸ் மருத்துவமனையில் திடீரென இறந்தார். அவர் எப்படி இறந்தார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மனைவி சுஹாவின் வேண்டுகோள்படி, அராபத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இதற்கிடையில், மரணம் அடைந்த போது அராபத் அணிந்திருந்த உடை மட்டும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதை ஆய்வு செய்த சுவிட்சர்லாந்து ஆய்வு மையம், அராபத் உடையில் பொலோனியம் கதிர்வீச்சு இருந்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்தது. இதையடுத்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் கோர்ட்டில், கடந்த ஆகஸ்ட் மாதம் கொலை வழக்கு விசாரணை எடுத்து கொள்ளப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை பாலஸ்தீன கமிட்டி கண்காணித்து வருகிறது. இக்கமிட்டியின் பொறுப்பாளர் தவுபிக் அல்திராவி கூறுகையில், அராபத் அணிந்திருந்த உடையில் கதிர்வீச்சு இருந்ததாக ஆய்வறிக்கை வந்ததால், மீண்டும் அவரது உடலை செவ்வாய்க்கிழமை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ரமலாவில் புதைக்கப்பட்ட அராபத் உடலை தோண்டி எடுத்து பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ரஷ்யா தடயவியல் நிபுணர்கள் தனித்தனியாக ஆய்வு நடத்த ஒப்புக் கொண்டுள்ளனர்.
இது வேதனையாக இருந்தாலும், அவசியமானது. அவர் கொலை செய்யப்பட்டாரா என்பதை அறிய வேண்டும். இஸ்ரேலியர்களால் அராபத் கொல்லப்பட்டார் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றார். பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மீண்டும் கடும் சண்டை நடந்து வருகிறது. ஒரு வாரம் இருதரப்பினரும் தாக்குதல் நடத்திய நிலையில் இப்போது தற்காலிகமாக சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அராபத்தின் உடலை தோண்டி எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதால், இருதரப்பிலும் பதற்றம் அதிகரித்துள்ளது. எனினும், அராபத் மரணத்தில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று இஸ்ரேல் தொடர்ந்து மறுத்து வருகிறது.

No comments:
Post a Comment