Monday, November 5, 2012

பத்திரிகையாளர்களுக்குவட்டியில்லா கடன் திட்டம்:இலவச "லேப்-டாப்'பும்: இலங்கை அரசு துவக்கம்!

Monday,November 05, 2012
இலங்கை::புலிகள் இன்று ஆயுதங்களினால் அல்ல- ஊடகங்களினூடாகவே போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வசதிகள், வாய்ப்புகளுக்கு மேலாக ஊடகவியலாளர்கள் பயம் அச்சமின்றி தமது செயற்பாடுகளை மேற்கொள்ள சுதந்திரமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.


செய்தியாளர் மாநாடுகளில் சுதந்திரமாகக் கேள்வியெழுப்பவும் பயப்பட்ட சூழல் இந்நாட்டில் இருந்தது. அதனை நாம் மாற்றியுள்ளோம். இப்போது எங்கும் சென்று சுதந்திரமாகச் செயற்படவும் சுதந்திரமாக எழுதும் உரிமையையும் சூழலையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், நீதித்துறைக்கு எச்சந்தர்ப்பத்திலும் அழுத்தங்களைக் கொண்டுவர விரும்பவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இத்தகைய சுதந்திரத்தை தாய் நாட்டின் உண்மை நிலையை உலகிற்கு எடுத்துச் சொல்வதற்குப் பயன்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு மடிகணனி, வாகனக் கொள்வனவுக்கான வட்டியில்லாக் கடன் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் நடை பெற்றது. அமைச்சர்கள் கெஹெலிய ரம்புக்வெல்ல, அநுர பிரியதர்ஷன யாப்பா, தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் உட்பட முக்கியஸ்தர்கள் சிரேஷ்ட ஊடக மற்றும் கலைத்துறை சார்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி: கடந்த வரவு - செலவுத் திட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு மடிக்கணனி, வாகனக் கொள்வனவுக்கான வட்டியில்லாக் கடன் வழங்குவது தொடர்பில் வாக்குறுதியளித்தேன்.

அந்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்த வரவு - செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சில தினங்களே உள்ள நிலையில் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன்.

எனினும் மடிகணனிகள் இலவசமாக வழங்கப்பட்டாலும் வட்டியில்லாமல் வாகனக் கடன் வழங்கினாலும் அரசு அந்தக் கடனை பொறுப்பேற்று வழங்க வேண்டியுள்ளது. வாகனம், மடிகணனிகளை விட ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் முக்கியம். சுதந்திரமாக போய் தகவல்களைத் திரட்டுவதற்கான சூழல் அவசியம். அதனை நாம் உருவாக்கியுள்ளோம்.

சுதந்திரமாகத் தகவல்களை வழங்குவதற்கான சூழல் அனைத்தையும் விட மிக முக்கியமானது. அத்தகைய சுதந்திரத்தை நாம் பெற்றுக்கொடுத் துள்ளோம்.

பிரபாகரன் வடக்கில் நடத்திய செய்தியாளர் மாநாடு எனது நினைவுக்கு வருகிறது. அங்கு எமது ஊடகவியலாளர்கள் எத்தனை பேர் போனீர்களோ எனக்குத் தெரியாது. அந்த மாநாட்டிற்கு இந்தியா உட்பட பல நாட்டு ஊடகவியலாளர்கள் வந்திருந்தார்கள்.

இந்தியாவிலிருந்து வந்த ஊடகவியலாளர்கள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பில் கேள்வி கேட்டனர். அதற்கு பாலசிங்கம் மன்னிப்புக் கோரினார். பலர் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். எனினும் இலங்கையில் நாட்டுத் தலைவர்கள், அரசியல் தலைவர்களென ஆர். பிரேமதாச, லலித் அத்துலத் முதலி, காமினி திசாநாயக்க போன்றோர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் நமது ஊடகவியலாளர்கள் கூட கேள்வியெழுப்பவில்லை. புனித தலதா மாளிகை, ஸ்ரீமா போதி போன்ற மதத்தலங்களுக்குக் குண்டுத்தாக்குதல் நடத்தியமை, திம்புலாகல, அரந்தலாவை பகுதிகளில் பெளத்த மத பிக்குகள் படுகொலை செய்யப்பட்டமை குறித்து நம்மவர் எவரும் எத்தகைய கேள்வியும் எழுப்பவில்லை.

சில வேளை அது தொடர்பில் அங்கு கேள்வி எழுப்பியிருந்தால் அங்கிருந்து மீள திரும்பியிருக்க முடியாது. ஊடகவியலாளர்களுக்கு அப்போதிருந்த சுதந்திரம் அவ்வளவுதான் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

இன்றும் புலிகள் வெளிநாடுகளில் பணத்தினால் சில ஊடக நிறுவனங்களையே தமக்கு ஆதரவாக்கிக் கொண்டுள்ளனர். அன்று ஆயுதம் வாங்கவும் புலிகளின் பெற்றோரை பராமரிக்கவும் பெரும் நிதியைச் செலவிட்டவர்கள் இவ்போது அரசுக்கெதிரான செயற்பாட்டுக்குச் செலவிடுகின்றனர். இப்போது ஊடகங்கள் மூலமான மோதல் போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன. இது தொடர்பில் சகலரும் குறிப்பாக ஊடகவியலாளர்கள் மிகுந்த கவனத்துடனும் அவதானத்துடனும் செயற்பட வேண்டும்.

இன்றைய தினம் யுனெஸ்கோ அமைப்பினர் 28 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அவர்களிடம் நான் நாட்டில் நிலவும் சுதந்திரச் சூழல் பற்றி அவர்களுக்குத் தெரிவித்தேன்.

நான் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அங்கு சிலர் என்னிடம் இலங்கையில் இடம்பெறும் நல்லவைகளன்றி அங்கு நடக்கும் குற்றங்கள் தொடர்பாகவே இங்கு செய்திகள் வருகின்றன எனக்கேட்பர். அதற்கு நான் பதில் சொல்ல நேரிடும்.

ஊடகவியலாளர்களுக்குப் பொறுப் புள்ளது தாய் நாட்டைப் பற்றிய உண்மை நிலையை உலகிற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்

No comments:

Post a Comment