Monday, November 5, 2012

போதைப் பொருள் சட்டம் குறித்து போலீஸ் அதிகாரிகளுக்குமுறையாக அறிவுறுத்த சென்னை சிறப்பு கோர்ட் உத்தரவு!

Monday,November 05, 2012
சென்னை::போலீஸ் அதிகாரிகளுக்கு, போதைப் பொருள் தடுப்புச் சட்டம் பற்றி, முறையாக அறிவுறுத்த வேண்டும்' என, சென்னை சிறப்பு கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.சென்னை, ஷெனாய் நகரைச் சேர்ந்தவர், நந்தகுமார்,54. பாரிமுனை, தேவராஜ் முதலி தெரு சந்திப்பில், பிளாஸ்டிக் பையுடன் நின்று கொண்டிருந்த, நந்தகுமாரை, பூக்கடை போலீசார் பிடித்தனர். போதைப் பொருள் தயாரிப்புக்கான வேதிப் பொருள் இருந்ததாகவும், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், 140 கிலோ, வேதிப் பொருள், கைப்பற்றப்பட்டதாகவும், வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம், 2002ம் ஆண்டு, ஆகஸ்ட்டில் நடந்தது. போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில், நந்தகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை, சென்னை, சிறப்பு கோர்ட் நீதிபதி, வி.ராமமூர்த்தி விசாரித்தார்.குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில், வழக்கறிஞர், ஆர்.சி.பால்கனகராஜ், ""அரசு தரப்பு வழக்கில், ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. குறியிடப்பட்ட மாதிரி பாக்கெட்டுகளும், சேகரிக்கப்பட்ட மாதிரி பாக்கெட்டுகளும், கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவில்லை. முறையான ஆவணங்கள், தயாரிக்கப்படவில்லை,'' என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, வி.ராமமூர்த்தி பிறப்பித்த உத்தரவு:அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களைப் பார்க்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவர் செய்த விதி மீறல்கள் என்ன, எங்கிருந்து வேதிப் பொருள் கைப்பற்றப்பட்டது என்பது, குறிப்பிடப்படவில்லை. குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க, அரசு தரப்பு தவறி விட்டது. எனவே, நந்தகுமார் விடுதலை பெற உரிமையுள்ளது.

போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் முக்கியத்துவம் பற்றி, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு, பெரிய அளவில் தெரியவில்லை. சட்டத்தில் உள்ள நடைமுறைகளும், அவர்களுக்கு தெரியவில்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரை, போதைப் பொருளை கைப்பற்றியதாக கூறப்படும் அதிகாரி, புகாரை பதிவு செய்துள்ளார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, போலீஸ் நிலையத்துக்கு பொறுப்பான அதிகாரி தான் வழக்கு பதிவு செய்ய வேண்டும். சட்டத்தில் கூறியுள்ள வழிமுறைகளைப் பின்பற்றாமல், இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புலனாய்வு அதிகாரி, போதைப் பொருள் தடுப்புச் சட்டம் பற்றி, முறையாக அறியவில்லை.எனவே, இந்த தீர்ப்பின் நகலை, போலீஸ் துறையின் தலைவருக்கு அனுப்ப வேண்டியதாகிறது. போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை, போலீஸ் அதிகாரிகள் தெரிந்து கொள்ளும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி, வி.ராமமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment