Friday, October 5, 2012

ஒருநாள் மட்டுமே அணிய நினைத்தேன்:தமிழக அரசு அனுமதி தர மறுத்ததால் இனி ஒவ்வொரு நாளும் கருப்பு சட்டை -கருணாநிதி!

Friday, October 05, 2012
சென்னை: "இந்த ஆட்சியின் அவலங்களை எதிர்த்து, இனி என்றும், கருப்புச் சட்டை அணிவேன்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


அவரது அறிக்கை: ஒரு ஜனநாயக நாட்டில், எதிர்கட்சிகள், ஆளுங்கட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும், குறைகளையும் சுட்டிக்காட்டி அமைதியான முறையில் சட்டரீதியாகப் போராட்டம் நடத்துவது அனுமதிக்கப்பட்ட முறை. மனிதசங்கிலி போராட்டம் அனுமதிக்கப்படாத ஒரு போராட்ட முறை அல்ல. அதுபோலவே, கறுப்பு உடை அணிந்து கொள்வதும் புதிதல்ல. அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள், தி.மு.க., ஆளுங்கட்சியாக இருந்த போது, சட்டசபைக்கே கறுப்பு உடை அணிந்து வந்துள்ளனர். ஒருவேளை முதல்வர் ஜெயலலிதா, இந்த அறவழிப் போராட்டத்திற்கு, சென்னையில் கருணாநிதியே, இந்த வயதில் தலைமை வகிக்க போகிறானே என்பதற்காக, என் உடல் நிலைப் பற்றிப் பரிதாபப்பட்டு, அனுமதி கொடுக்கவில்லையோ என்னவோ? அப்படியென்றால், வெளியூர்களிலாவது அனுமதி கொடுத்திருப்பார்களே... ஏன் கொடுக்கவில்லை. என்னை பொருத்தவரையில், 5ம்தேதி ஒரு நாள் தான் இந்த ஆட்சியினரின் அவலங்களை எதிர்த்து, கருப்பு உடை அணிவதாக இருந்தேன்; அதற்கு இந்த அரசு அனுமதி கொடுக்கவில்லை. அதனால், இன்று முதல் இந்த ஆட்சியின் அவலங்களை எதிர்த்து, கருப்புச் சட்டை அணிவேன். இன்றே அணிவேன்; இனி என்றும் அணிவேன், என்றார்.

மாற்றத்தின் பின்னணி?:

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கருணாநிதி திடீரென மஞ்சள் துண்டு அணியத் துவங்கினார். தி.மு.க., தலைவர் கருணாநிதியின் ராசி ரிஷபம். இந்த ராசிக்கு குரு பகவான் சாதகமில்லாதவராக இருப்பதால், அவரை குளிர்விக்கும் வகையில், மஞ்சள் துண்டு அணியத் துவங்கியதாக, அப்போது தகவல்கள் வெளியாகின. தற்போது, திடீரென, "கருப்பு சட்டையை தொடர்ந்து அணிவேன்' என்று கருணாநிதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ஜோதிட வட்டாரத்தில் விசாரித்த போது, அவர்கள் கூறியதாவது:

கருப்பு நிறம், சனி பகவானுக்கு உகந்த நிறம். கருணாநிதியின் ரிஷபராசிக்கு ஐந்தில் சனி இருந்த போது, அதன் பலனாக, ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டது. ஆட்சி மாற்றம், ஏற்பட்டு பதவி பறிபோனது. தற்போது ரிஷபராசிக்கு, ஆறில் சனி பகவான் மாறியுள்ளார். இதனால், அவருக்கு உகந்த கருப்பு வண்ண உடையை அணிவதன் மூலம், எதிரிகளை எதிர்கொள்ளவும், வெற்றிகளை குவிக்கவும் முடியும் என்பதால், அவர் கருப்பு உடைக்கு மாறியிருக்கிறார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். முதல்வர் ஜெயலலிதாவிற்கு பச்சை வண்ணம் பிடிக்கும் என்பதால், அவர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும், அழைப்பிதழில் துவங்கி, மேடை அலங்காரம் வரை, அனைத்தும் பச்சை வண்ணத்திலேயே அமைக்கப்பட்டு வந்தது. இதில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது, பிரவுன் மற்றும் வெளிர் மஞ்சள் நிறங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment