Friday, October 05, 2012
வாஷிங்டன்: :அமெரிக்க அதிபர், தேர்தல் பிரசாரம் தொடர்பாக, ஒரே மேடையில் விவாதித்த குடியரசு கட்சி வேட்பாளர், மிட் ரோம்னிக்கு, மக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில், நவ., 6 ல், அதிபர் தேர்தல் நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில், அதிபர் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில், மிட் ரோம்னி போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஒரே மேடையில் விவாதிப்பது, அமெரிக்காவில், நடைமுறையில் உள்ளது. மூன்று முறை, இவர்கள் பல்வேறு இடங்களில், ஒரே மேடையில் விவாதித்து, மக்களிடம் ஓட்டு கேட்பர். இந்த முறையில் நேற்று முன்தினம், டென்வர் நகரில் இருவரும் ஒரே மேடையில் விவாதித்தனர். ஒன்றரை மணி நேரம் நடந்த இவர்களது விவாதத்தில் பொருளாதார பிரச்னைகள் தான் அதிகம் இடம் பெற்றன. குடியரசு கட்சி வேட்பாளர், ரோம்னியின், ஆணித்தரமான பேச்சுக்கு முன், ஒபாமா சில இடங்களில் அடங்கி தான் போனார். ஒபாமா ஆட்சியில், நடந்த பொருளாதார குளறுபடிகளை, ரோம்னி பட்டியலிட்ட பாங்கு, மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த விவாதம் தொடர்பாக, ரோம்னியின் கருத்தை 67 சதவீதம் பேரும், ஒபாமாவின் கருத்தை, 25 சதவீதம் பேரும் ஆதரித்துள்ளனர்.
இந்த விவாத நிகழ்ச்சியின் போது, பார்வையாளர் பகுதியில், மிட் ரோம்னியின் மனைவியும், ஒபாமாவின் மனைவியும் அமர்ந்திருந்தனர். விவாதத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, ஒபாமா, தனது மனைவிக்கு திருமண நாள் வாழ்த்தை தெரிவித்துக் கொண்டார். ஒபாமா, மிச்சேல் தம்பதிக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. ஒபாமா தம்பதிக்கு, எதிர்க்கட்சி வேட்பாளர் ரோம்னியும் தனது வாழ்த்தை தெரிவித்துக் கொண்டார்.
இரண்டாவது கட்ட விவாதம், நியூயார்க்கில், அக்., 16 ல் நடக்கிறது.

No comments:
Post a Comment