புதுடில்லி::கொள்ளை சம்பவங்களும், ஆயுதம் ஏந்திய கும்பல்களின் தாக்குதல்களும், ஆசிய கடல் பகுதியின் அச்சுறுத்தலாக விளங்குகின்றன; இவை, ஸ்திரத்தன்மையைப் பாதிக்கின்றன,'' என, ராணுவ அமைச்சர் அந்தோணி பேசினார். டில்லியில் நேற்று, ஆசிய கடலோரக் காவல் படை மாநாடு நடந்தது. சீனா, ஜப்பான், வங்கதேசம், இலங்கை, வியட்னாம், கம்போடியா என, 17 நாடுகளின், கடலோரக் காவல் படைத் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில், ராணுவ அமைச்சர் அந்தோணி பேசியதாவது: ஆழ்கடலில், சாதாரண திருட்டு முதல், தீவிரவாத நடவடிக்கை வரை பலவும் நடக்கின்றன. பரஸ்பர ஒத்துழைப்பு, தகவல்கள் பரிமாற்றம் போன்றவையே, கடல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். ஆயுதம் ஏந்திய கொள்ளைக் கும்பல்களின் தாக்குதல், கப்பல்களைக் கடத்திச் செல்லுதல், போதைப் பொருட்
கள் மற்றும் ஆயுதம் கடத்தல் போன்ற அச்சுறுத்தல்கள், ஆழ்கடல் பகுதியின் சவால்களாக உள்ளன. இவை, இந்தப் பகுதியின் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கின்றன. கடல் பயணம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்ற எங்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில், பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம். கடற் கொள்ளையர்கள் தாக்குதல், தீவிரவாத நடவடிக்கைகள், ஆயுதக்கடத்தல் மற்றும் எண்ணெய் கசிவு போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். இதற்காக, ஆசிய கடல் பகுதியில் உள்ள நாடுகளுடன், குறிப்பிட்ட கால இடைவெளியில், போர் பயிற்சிகளும் மேற்கொள்கிறாம். பரஸ்பரம் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது; பரஸ்பர பயிற்சி, ஒத்துழைப்பு போன்றவற்றின் மூலம், எதிர்காலத்தில், கடல் பயணம் பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆசிய கடல் பகுதியில் உள்ள நாடுகள் அனைத்தும், ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், இந்தப் பகுதியை பாதுகாப்பானதாக மாற்றலாம். இவ்வாறு, அந்தோணி பேசினார்.
No comments:
Post a Comment