Thursday, October 04, 2012
இலங்கை::மனித உரிமை மீறல் தொடர்பான எந்த உண்மையையும் இலங்கை அரசாங்கம் கிடப்பில் போட மாட்டாதென பொறுப்புக் கூறும் விடயம் சம்பந்தமாக தம்மிடம் கேள்வியெழுப்பிய தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் அலுவல்கள் பற்றிய அமெரிக்காவில் உதவி ராஜாங்க செயலாளரிடம் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் நகரில் திரு. பிளேக்கிற்கும் அமைச்சர் ஹக்கீமிற்கும் இடையிலான கலந்துரையாடலின் போது இது பற்றியும் குறிப்பிடப்பட்டதாக இலங்கையின் ஆங்கில நாளிதழ் ஒன்றின் செய்தியாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் கூறியுள்ளார். அதனை அப் பத்திரிகை புதன்கிழமை (03) பிரசுரித்துள்ளது.
பிரஸ்தாப உரையாடலின் போது யுத்தத்தின் இறுதி கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சர்வதேச மனித உரிமை சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு குறித்து எட்டப்பட்டுள்ள முன்னேற்றம் எத்தகையது என திரு. பிளேக், அமைச்சர் ஹக்கீமிடம் வினவியுள்ளார். அதற்கான பதிலாகவே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். திருகோணமலையில் தமிழ் மாணவர்கள் ஐவர் 2006 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டது தொடர்பான புலன்விசாரணைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதோடு, கொலைக் குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் நீதிமன்றத்தினூடாக வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படுவார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க உதவிச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக்கிற்கும், இலங்கையின் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமிற்கும் இடையிலான கலந்துரையாடலின் ஏனைய விபரங்களை நீதியமைச்சின் ஊடகப்பிரிவு நேற்று வெளியிட்டிருந்தது.

No comments:
Post a Comment