Thursday, October 4, 2012

திவிநெகும சட்டமூலம் தற்சமயம் 8 மாகாண சபைகளிலும் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது!

Thursday, October 04, 2012
இலங்கை::சட்டமூலம் தற்சமயம் 8 மாகாண சபைகளிலும் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திவிநெகும’ திணைக்கள சட்டமூலத்திற்கு தென், சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளும் நேற்று முழுமையான அங்கீகாரம் வழங்கியுள்ளன. இந்த சட்டமூலம் தென் மாகாண சபையில் 21 மேலதிக வாக்குகளினாலும் சப்ரகமுவ மாகாண சபையில் 15 மேலதிக வாக்குகளினாலும் வடமத்திய மாகாண சபையில் 07 மேலதிக வாக்குகளினாலும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதன்படி, 9 மாகாணங்களில் வட மாகாணம் தவிர்ந்த 8 மாகாண சபைகளிலும் மேற்படி சட்டமூலத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. வட மாகாண சபை தேர்தல் இன்னும் நடத்தப்படாத நிலையில், வட மாகாண ஆளுநரினூடாக சட்ட மூலத்திற்கு அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தவுடன் வட மாகாணத்தில் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். வட மாகாண சபையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் சட்டமூலம் மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

திவிநெகும சட்டமூலத்திற்கு மாகாண சபைகளின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்திருந்தது. இதன் பிரகாரம் மேற்படி சட்டமூலம் மாகாண சபைகளின் அனுமதிக்காக சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. கடந்த வாரம் மேற்படி சட்டமூலத்திற்கு ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாண சபைகள் அனுமதி வழங்கியதோடு, கிழக்கு, மத்திய மாகாண சபைகள் இதற்கு நேற்று முன்தினம் அங்கீகாரம் அளித்திருந்தன.

மேற்படி சட்டமூலம் நேற்று சப்ரகமுவ, தென் மற்றும் வடமத்திய மாகாண சபைகளில் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.

தென் மாகாண சபை

திவிநெகும திணைக்கள சட்டமூலம் தொடர்பான பிரேரணை நேற்று தென் மாகாண முதலமைச்சர் சான் விஜேலால் த சில்வாவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை ஆளும் தரப்பினர் ஆதரித்து உரையாற்றியதோடு எதிர் தரப்பினர் எதிராக உரையாற்றினர்.

விவாத முடிவில் வாக்கெடுப்பு இடம்பெற்றது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 34 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் கிடைத்தன. ஐ.தே.க. வும், ஜே. வி. பியும் எதிராக வாக்களித்தன.

சப்ரகமுவ மாகாணம்

சப்ரகமுவ மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட திவிநெகும சட்டமூலம 15 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. சப்ரகமுவ மாகாண சபை திவிநெகும சட்டமூலத்தை அங்கீகரிப்பது குறித்து ஆராய்வதற்காக நேற்று காலை கூடியது. இது தொடர்பான பிரேரணையை சப்ரகமுவ முதலமைச்சர் மஹிபால ஹேரத் சமர்ப்பித்தார்.

விவாத முடிவில் இது தொடர்பிலான வாக்கெடுப்பு பிற்பகல் இடம்பெற்றது. இதன்போது, சட்டமூலத்திற்கு ஆதரவாக 27 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் வழங்கப்பட்டன. இ. தொ. கா. உறுப்பினர்கள் இருவரும் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிர்க்கட்சி தலைவி துதித்த விஜயமான அடங்கலான நால்வர் சபைக்கு சமுகமளித்திருக்கவில்லை. திவிநெகும சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மஹிபால ஹேரத்,

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த யோசனையால் 27 ஆயிரம் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நிரந்தர அரச சேவைக்கு உள்வாங்கப்படுகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது.

2001 ஆம் ஆண்டு ஆட்சி நடத்திய ஐக்கியக் தேசிய கட்சி எந்தவொரு அரச நியமனங்களையும் வழங்காத நிலையில் இன்று அரச ஊழியர்களுக்கும் அநீதி இழைக்கும் வகையில் இங்கு சபையில் பிரஸ்தாபிக்கின்றனர். அரசாங்கம் பொருளாதார யுத்தம் ஒன்றை நடாத்தி வருகிறது. இதற்கு எம்மாலான உதவிகளை மேற்கொள்ள வேண்டும். அதனை விடுத்து குறைகூறக் கூடாது என்றார். சபையில் திவிநெகும யோசனை குறித்த விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சபரகமுவ மாகாண கட்டிடத்திற்கு முன்பாக சுமார் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டனர்.

வடமத்திய மாகாணம்

திவிநெகும சட்டமூலம் தொடர்பில் நேற்று வடமேல் மாகாணத்திலும் முழுநாள் விவாதம் நடைபெற்றது. வடமேல் மாகாண முதலமைச்சர் எஸ். எம். ரஞ்சித் இது தொடர்பான பிரேரணையை சபையில் சமர்ப்பித்தார். இது தொடர்பிலான விவாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து வாக்கெடுப்பு இடம்பெற்றது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 18 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் வழங்கப்பட்டன. இதன்படி, 07 மேலதிக வாக்குகளால் திவிநெகும சட்டமூலம் வடமத்திய மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது.

மலையக அபிவிருத்தி அதிகார சபை, தெற்கு அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சமுர்த்தி அதிகார சபை அடங்கலான ஐந்து நிறுவனங்களை இணைத்து திவிநெகும அபிவிருத்தி திணைக்களம் என்ற பெயரில் புதிய நிறுவனமொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தது. இதனூடாக சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் மட்டுமன்றி சமுர்த்தி பயனாளர்களும் பயனடைய உள்ளனர்.

இது தொடர்பான சட்டமூலம் கடந்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது தெரிந்ததே.

சமுர்த்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம்

எட்டு மாகாண சபைகளிலும் திவிநெகும சட்ட மூலத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததன் ஊடாக வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், வாழ்வாதாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கும் உரிய சக்தி கிடைத்ததாகவே கருதுகிறோம் என சமுர்த்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலக்கசிறி தெரிவித்தார்.

திவிநெகும சட்ட மூலத்தின் ஊடாக சமுர்த்தி உதவி பெறுபவர்களின் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது. சமுர்த்தி உதவி பெறுபவர்களின் கொடுப்பனவுகள் யாவும் அவர்களது வங்கி கணக்குகளில் வைப்பிவிலிடப்படுகிறது. அவர்களது பணம் வங்கிகளில் இல்லை என சில தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். இது குறித்து எவரும் அச்சப்படத் தேவையில்லை.

நேற்று வடமத்திய, சப்ரகமுவ, தென்மாகாண சபைகளிலும் திவிநெகும சட்ட மூலத்திற்கு ஆதரவு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியானது. இது ஏழை மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, திவிநெகும சட்டமூலத்திற்கு வட மாகாண ஆளுநரின் அனுமதி கிடைக்க பெற்றுள்ளதாக அரச வட்டார தகவல்களை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுளளது.

எனினும், இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

குறித்த சட்டமூலம் தொடர்பில் ஆளுநரின் தீர்மானங்களை தடுக்குமாறு வலியுறுத்தியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, வட மாகாணத்தில் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லையெனவும் ஆளுநர் ஒரு அரச அதிகாரி மாத்திரமே எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment